![rk suresh](http://image.nakkheeran.in/cdn/farfuture/TvzwIaDhcCPutlPpK3QQX1-fuGhsQla_VZRy2G_fQMc/1613806799/sites/default/files/inline-images/95_5.jpg)
சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வேட்டை நாய்'. ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, துணைத் தலைவர் கதிரேசன், நாயகன் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “இந்தப் படத்தின் இயக்குநர் ஜெய்சங்கர் படாத கஷ்டமே கிடையாது. இயக்குநர் பாலாவுக்கு அடுத்து என்னை செதுக்கியதில் இயக்குநர் ஜெய்சங்கருக்குத்தான் முக்கியப் பங்கு உண்டு. இந்தப் படத்திற்கு ‘வேட்டை நாய்’ என பைரவரின் பெயரை டைட்டிலாக வைக்கும்போதே ஒரு அதிர்வு ஏற்பட்டது. 'புதியபாதை' படத்தில் வருவது போலத்தான் இந்தப் படத்தில் என் கதாபாத்திரமும். ராம்கி தற்போது திரையுலகில் பட்டும்படாமல் நடித்துவருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்பது உறுதி.
படங்களில் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே என் மனைவியின் அனுமதியைப் பெற்றுவிடுவேன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக் காட்சியைப் பார்க்கும்போது எதுவும் வித்தியாசமாக, விரசமாகத் தெரியாது. படம் பார்க்கும் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களை அதற்குள் பொருத்திக்கொள்வார்கள். தியேட்டர்களோ, ஓடிடி தளங்களோ எதுவானாலும் பெரிய படங்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சிறிய படங்களுக்கும் கொடுக்க வேண்டும். சின்ன பட்ஜெட் படங்களால்தான் திரையுலகம் வாழ்கிறது” எனக் கூறினார்.