![RK Suresh](http://image.nakkheeran.in/cdn/farfuture/2hl-BUXJO0XuQFTbJKIgHe5LQUmF3Koi637DAVRpvzM/1651842858/sites/default/files/inline-images/217_3.jpg)
கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ஜோசப் திரைப்படம், விசித்திரன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் இயக்க, ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் பாலா தயாரித்துள்ளார்.
இப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைக் காண நடிகர் ஆர்.கே.சுரேஷ் திரையரங்கிற்கு வருகை வந்தார். ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஆர்.கே.சுரேஷ், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் இந்திப்படம், இங்கிலீஷ் படம், தெலுங்குப்படம் என பிற மொழிப்படங்கள் 70 சதவிகிதம் வருகிறது. இதனால் சின்னப் படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி இல்லை. தமிழ்நாட்டில்தான் இப்படி ஒரு பிரச்சனை உள்ளது. சின்னப் படங்களுக்கு குறிப்பிட்ட அளவிலான திரையரங்குகள் கிடைத்தால்தான் வாய்மொழியாக கொஞ்சம் கொஞ்சமாக மக்களைச் சென்றடைய முடியும். கர்நாடகாவில் 70 சதவிகிதம் அவர்கள் மொழிப்படங்கள்தான் வெளியாகும். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளோம்.
எந்தப் படங்களுக்கு எவ்வளவு திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க சீனாவில் ஒரு அமைப்பு உள்ளது. அதேபோல, நம் பக்கத்து மாநிலத்திலும் உள்ளது. அது மாதிரியான ஒன்றை இங்கு கொண்டுவந்தால்தான் சின்னப் பட்ஜெட் படங்கள் மக்களைச் சென்றடைய முடியும்" எனத் தெரிவித்தார்.
மேலும், அடுத்த வாரம் டான் என்ற பெரிய திரைப்படம் வெளியாகிறது. இது விசித்திரன், கூகுள் குட்டப்பா மாதிரியான சின்ன படங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "உதயநிதி அண்ணன் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவர். சினிமாத்துறையில் என்ன பிரச்சனை என்றாலும் உடனே வந்து உதவி செய்யக்கூடியவர். அவரே விநியோகஸ்தராகவும் இருப்பதால் அவருக்கே நன்றாகத் தெரியும். எனவே நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சின்ன படங்களுக்கு 30 சதவிகித திரையரங்குகள் கொடுத்துவிட்டு பிற திரையரங்குகளில் பெரிய படங்களை வெளியிடவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்தால் எங்களுக்கும் உதவிகரமாக இருக்கும்" எனப் பதிலளித்தார்.