![rk suresh](http://image.nakkheeran.in/cdn/farfuture/mOGDZblPyC2ihUCpvqrQ9ivnOewSOZTzR4OhkaiNxoU/1603274131/sites/default/files/inline-images/rk-suresh.jpg)
ஸ்டூடியோ நைன் என்னும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருப்பவர் ஆர்.கே. சுரேஷ். தமிழ் பட விநியோகஸ்தகராகச் செயல்பட்டு வந்த சுரேஷ் பின்னர் 'தம்பிக்கோட்டை' என்னும் படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானார்.
தொடக்கம் முதலே சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட ஆர்.கே. சுரேஷ். பாலாவின் இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' என்னும் படத்தில் வில்லனாக அறிமுகமானார். இதன்பின், 'மருது', 'நம்ம வீட்டுப் பிள்ளை', 'பில்லா பாண்டி', 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கும் சினிமா பட விநியோகஸ்தர் மது என்பவருக்கும் அண்மையில் குடும்பத்தினர் மத்தியில் திருமணம் நடைபெற்றுள்ளது. கரோனா அச்சுறுத்தல் என்பதால் குடும்பத்தினரை மட்டும் அழைத்து ரகசியமாக திருமணத்தை முடித்துள்ளார். திடீரென தனக்குத் திருமணம் நடைபெற்றுவிட்டது என்று புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி, ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆமாம் எனக்குத் திருமணம் நடந்துள்ளது. உங்களது அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுக்காக நன்றி" என்று கூறியுள்ளார்.