இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகும் நிலையில் கரோனா பரவலைத் தடுக்க முன்னதாக கோலிவுட் திரைப்பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த ஒரு மாதமாக ஷூட்டிங் எதுவும் நடைபெறாத நிலையில் சினிமா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சினிமா தொழிலாளர்கள் சங்கமான ஃபெப்ஸியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பிரபலங்களிடம் நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்த பலரும் லட்ச கணக்கில் நிதியுதவி அளித்தனர்.மேலும் பல நடிகர்கள் தொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொடுத்தனர். இந்நிலையில் நிதியுதவி அளித்த திரை பிரபலங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். அதில்...
"கரோனா பாதிப்பால் நிதியுதவி கோரி திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதற்கு இதுவரை 2 கோடி 45 லட்ச ரூபாய் நிதியாக திரையுலகினர் உதவி செய்துள்ளனர். அதேபோல் 2400 அரிசி மூட்டைகள் உதவியாகக் கிடைத்துள்ளன. 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொரு சங்கத்துக்கும் 100 பேரை வரவழைத்து சமூக இடைவெளி விட்டு உதவிகள் செய்து வருகிறோம். இதுவரைக்கும் 15 ஆயிரம் பேருக்கு உதவி செய்திருக்கிறோம்.இன்னும் 10 ஆயிரம் பேருக்குத் தேவைப்படுகிறது. ஒரு நபருக்கு 25 கிலோ அரிசியும், 500 ரூபாய் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கும் அளித்து வருகிறோம். 25 ஆயிரம் பேருக்கும் கொடுப்பதற்கு 3.75 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. 2 கோடி 45 லட்ச ரூபாயை வைத்து முதலில் கொடுத்து வருகிறோம். இதர நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உதவி செய்வதை வைத்து இதை முடிக்கவுள்ளோம்.அனைத்து உறுப்பினர்களுக்குமே இந்த உதவியைச் செய்வதாகக் கூறியுள்ளோம்.அதை நிச்சயமாக இன்னும் 2, 3 நாட்களுக்குள் முடித்துவிடுவோம்.
ரஜினி, அஜித், சிவகுமார் குடும்பத்தினர், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி எனத் தொடங்கி உதவி செய்த அனைவருக்கும் நன்றி.நிதியுதவி அளித்தவர்களில் திரையுலகைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரை வெளியே சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் 25 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.பசிப் பிணியைப் போக்கிய அனைவருக்கும் நன்றி.இது சாதாரண விஷயமல்ல.இந்தப் புண்ணியம் அனைத்துமே உங்களுக்கும்,உங்கள் குடும்பத்துக்கும்தான்.உயர்ந்த நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்குமே வேராக இருப்பது திரைப்படத் தொழிலாளர்கள்தான்.இந்த வேருக்கு இப்போது தண்ணீர் ஊற்ற வேண்டும். இன்னும் 9 ஆயிரம் பேருக்கு உதவிகள் தேவை.அனைத்துத் திரையுலகினருமே உதவ வேண்டும். எவ்வளவு பணம் என்பது முக்கியமில்லை, மனம் தான் முக்கியம். உதவிகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
பெப்சிக்கு கொடுப்பதைத் தாய் வீட்டுக்குக் கொடுக்கும் சீதனமாகத்தான் வைத்துக் கொள்ள வேண்டும்.அரசுக்கும் அனைவரும் நன்கொடை கொடுக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம்.கார்கில் போர், குஜராத் பூகம்பம் ஆகியவற்றின்போது அந்தப் பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. இப்போது ஒட்டுமொத்த இந்தியாவே பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நேரத்தில் ஒவ்வொரு கலைஞனும் உதவி செய்ய வேண்டியது கடமை. நாங்களே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற நிலைமையில் இருந்தாலும் கூட, உறுப்பினர்கள் சந்தா தொகையிலிருந்து 10 லட்ச ரூபாய் நன்கொடையாகக் கொடுக்கவுள்ளோம். அதேபோல் பெப்சி தொழிலாளர்கள் அனைவரும் 1 ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்றார்கள். ஆகவே, மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை தமிழக அரசின் நிவாரண நிதிக்குக் கொடுக்கவுள்ளோம். அதேபோல் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது தமிழக அரசு.அதில் திரைப்படத் தொழிலாளர்கள் விடுபட்டுப் போயுள்ளனர்.அதில் எங்களையும் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.இது தொடர்பாகக் கடிதமும் கொடுத்துள்ளோம். அதேபோல் நாங்கள் யாரையும் நேரடியாக அணுகவில்லை.மீடியா வாயிலாக மட்டுமே உதவிகள் கேட்டு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டோம்.அதேபோல் தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் கடிதம் அனுப்பினோம்''