Skip to main content

''இதெல்லாம் பேசி முடிவானால்தான் படப்பிடிப்பைத் தொடங்க முடியும்'' - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

dvv

 

தொலைக்காட்சி சீரியல்களுக்கான படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கியமைக்காகத் ஃபெப்சியும், தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தகவல் மற்றும் விளம்பர அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு சமீபத்தில் நன்றி தெரிவித்துள்ளனர்.
 


இந்நிலையில் தற்போது ஃபெப்சி அமைப்பு, தொழில்துறை போலவே 50% பணியாளர்களுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஸ்டெப்ஸ் அமைப்பைச் சேர்ந்த சுஜாதா விஜயகுமார் மற்றும் குஷ்பு, மனோபாலா உள்ளிட்டோர் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி...

''சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க தமிழக அரசு அனுமதியளித்திருப்பதற்கு நன்றி தெரிவித்தோம். மேலும், சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளனர். ஆனால் இதர துறைக்கு 50% தொழிலாளர்களுடன் அனுமதி கொடுத்துள்ளார்கள். சின்ன தொடராக இருந்தால் 100 பேர் வரை இருப்பார்கள். பெரிய தொடராக இருந்தால் 200 பேர் இருப்பார்கள். தற்போது 20 பேர் என்றால் நடிகர்களே 20 பேர் வந்துவிடுவார்கள். சின்னத்திரை படப்பிடிப்பு என்பது 60 பேர் வரை இல்லாமல் ஆரம்பிக்கவே முடியாது. ஆகையால் 24 யூனியன் இருக்கிறது. யூனியனுக்கு ஒருவர் என்றாலே 24 பேர் வந்துவிடுவார்கள். ஆகையால் நடிகர்கள் எல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் 50 பேர் கொண்டு படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
 

 


அதேபோல் சின்னத்திரை சங்கம் சார்பாகவும் கோரிக்கை வைத்துள்ளோம். அதன்படி படப்பிடிப்புக்கு வெளியூரிலிருந்து நடிகர்கள் வருவார்கள். அவர்கள் கரோனா நெகடிவ் என்ற சான்றிதழுடன் வந்தால் தனிமைப்படுத்தக் கூடாது என்று கேட்டிருக்கிறோம். அதைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். மேலும் முதல்வரிடம் பேசிவிட்டு சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் பேசி முடிவானால்தான் படப்பிடிப்பு தொடங்க முடியும்" எனக் கூறியுள்ளார். இவரை தொடர்ந்து ஸ்டெப்ஸ் செயலாளர் நடிகை குஷ்பு பேசும் போது... "போட்டி போட்டுக் கொண்டு படப்பிடிப்பைத் தொடங்க விரும்பவில்லை. ஏனென்றால் முதலில் பாதுகாப்புதான் முக்கியம். அனைத்துக்கும் முறையான அனுமதி கிடைத்தவுடன், ஒரே சமயத்தில் அனைத்து சீரியல் படப்பிடிப்பும் தொடங்கும்" என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்