Skip to main content

தனுஷ் பட விவகாரம்; ஆர்.கே.செல்வமணி விளக்கம் 

Published on 18/09/2024 | Edited on 18/09/2024
rk selvamani about dhanush movie issue

தமிழ்த் திரைப்படத் துறையின் விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்த வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் முடிவு செய்து , கடந்த ஆகஸ்ட் 16 முதல் புதிய திரைப்படங்கள் தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சென்னையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (ஃபெப்சி) சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர் சங்கம் எந்தந்த படங்களுக்கு பரிந்துரை கடிதம் வழங்கியதோ அதனடிப்படையில் தொழில் நுட்ப கலைஞர்களை வழங்கி வந்தோம். தனுஷ் படத்தின்‌ படப்பிடிப்பு ஜூலை மாதமே தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் முறைப்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தெரிவிக்கவில்லை. பதிவும் செய்யவில்லை. வொண்டர் பார் நிறுவனத்தின் அறியாமை அல்லது மெத்தனப்போக்கு காரணமாக சம்மேளனம் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் தொழில் நுட்ப கலைஞர்களை அவர்களுக்கு வழங்க முடியாமல் இருந்தது. பின்பு தயாரிப்பாளர் வேண்டுகோள் கடிதத்தை ஏற்று தொழிலாளர் சம்மேளனத்தை ஏற்றும் ஏற்கனவே நடந்து வரும் திரைப்படங்களின் பட்டியலில் தனுஷ் திரைப்படத்தின் பெயரையும் சேர்த்து தற்போது தொழில்நுட்ப கலைஞர்கள் வழங்கப் பட்டு வருகிறார்கள்” என்றார். தனுஷ் இயக்கத்தில் தேனியில் ஒரு படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

மேலும், “ஏற்கனவே புதிய திரைப்படங்கள் தொடங்குவது நிறுத்தப்பட்டமையால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பேச்சுவார்த்தை செப்டம்பர்  30க்குள் முடிவெடுத்து, அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகளோடு அனைத்து படப்பிடிப்புகளும் தொடங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து, பெப்சி சார்பில் இயக்குநர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், டப்பிங் யூனியன் உள்ளிட்ட ஏழு சங்கங்களில் இருந்து குழு அமைக்க உள்ளோம். அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்கள் அளிக்கலாம்” என்றார். 

சார்ந்த செய்திகள்