![fjtfgjgfjmgf](http://image.nakkheeran.in/cdn/farfuture/9cmRK0ylsS485GtJpQ-PF7__6JHAFNmrt9pwHOqIs-c/1627115795/sites/default/files/inline-images/Navarasa_Roudhram_Netflix_2580.jpg)
தென்னிந்திய நடிகையும், பிக் பாஸ் 2 வெற்றியாளருமான நடிகை ரித்விகா, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில் பிரபல நடிகரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் சுவாமியுடன் பணியாற்றியது மிகச்சிறந்த அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார். ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம் இந்திய தொன்மை விதிகளாக கூறப்படும், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளைக் கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளைக் கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சுவாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரௌத்திரம்’ கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். நவரசங்களுள் கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது. ‘நவராசா’ படம், வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், அரவிந்த் சுவாமியுடன் இணைந்து பணிபுரிந்தது குறித்து நடிகை ரித்விகா பேசியுள்ளார். அதில்...
"அரவிந்த் சுவாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது என் வாழ்வில் மிகப்பெருமையயான தருணம். ஒரு நடிகராக இல்லாமல், இயக்குநராக அவரை அருகில் இருந்து பார்த்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு காட்சியை உருவாக்குவதில், அனைத்து தொழில்நுட்ப சாத்தியங்களையும் பயன்படுத்துவதில், தேர்ந்தவராக இருந்தார். சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும், அதை உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது. இப்படத்திற்காக காட்சிகள் மற்றும் வசனங்களை ஒத்திகை செய்யும் ஆன்லைன் கூட்டங்களில் கலந்துகொண்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது" என்றார்.