பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரிஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கிய வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் என்பவருடன் மோதி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தார். ஆனால் தற்போது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் எடை 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பேரதிர்ச்சியை எழுப்பி உள்ளது.
வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு முன்பாக தனது உடல் எடையைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதனால் அவர் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அவருக்குத் துணையாக இருப்பதாகவும் வினேஷ் போகத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் எனப் பலரும் வினேஷ் போகத்துக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமந்தா, பார்வதி, டாப்சி எனத் தொடங்கி கரீனா கபூர், ப்ரீத்தி ஜிந்தா என பல்வேறு திரைப்பிரபலங்கள் வினேஷ் போகத்துக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இந்த வரிசையில், முன்னாள் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரரும் நடிகையுமான ரித்திகா சிங் “வினேஷ் போகத் தகுதி நீக்கத்தால் இந்தியா முழுவதும் திணறுகிறது. சிறந்த வீரர்களை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு அவர் சென்றாலும் பதக்கம் இல்லாமல் அவர் வீடு திரும்புவது மிகவும் வருத்தமளிக்கிறது. எடையைக் குறைத்தது, கடுமையான சண்டைகளில் போட்டியிட்டது, பின்பு மீண்டும் இறுதிப் போட்டிக்கு எடையைக் அதிகரித்தது இவை அனைத்தும் அவருக்கு மிகவும் கடினமானதாக இருந்திருக்கும். இன்று அவர் தகுதிபெறவில்லை என்பதைக் கேட்டு என் மனம் உடைந்தது. ஆனால் அவர் எப்போதும் எங்கள் ஒலிம்பிக் சாம்பியனாக இருப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.