Skip to main content

ரீ ரிலீஸில் ஹிட்டடிக்கும் பழைய படங்கள்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
re release movie gets good response

வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்படுவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. முதல் கொரனா முடிந்த சமயத்தில் புதுப் படங்கள் பெரிதளவு தியேட்டரில் ரிலீஸாகாமல் இருந்ததால், ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களான பருத்தி வீரன், எம்.எஸ். தோனி உள்ளிட்டவை ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. மேலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் ஆதரவு எந்த படத்திற்கு அதிகமாக இருக்கிறதென்பதை வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் படங்களை ரீ ரிலீஸ் செய்து வந்தன பிரபல திரையரங்குகள். இதில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, அன்பே சிவம் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இந்த படங்கள் வெளியான சமயத்தில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் ரீ ரிலீஸுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 

குறிப்பாக கல்ட் க்ளாசிக் என்று அடையாளப்படுத்தப்பட்ட படங்கள் காலத்தை கடந்து ரசிக்கும்படியாக இருக்கும் படங்கள், இன்றைய காலத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனால் மேற்குறிப்பிட்ட அடையாளப்படுத்தப்பட்ட படங்கள் எல்லாம் திரையரங்கிற்கு வருவதை ரசிகர்கள் கொண்டாடுவதோடு ஆரவாரமாக ஆதரித்தும் வருகின்றனர். பிடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்யும்படியும் திரையரங்க உரிமையாளர்களுக்கு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்த வரிசையில் சமீப காலமாக ரீ ரிலீஸ் செய்யும் படங்கள் அதிகரித்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களும் இந்த லிஸ்டில் இருக்கின்றன. எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜியின் வசந்த மாளிகை, ரஜினியின் அண்ணாமலை, கமலின் வேட்டையாடு விளையாடு, விஜய்யின் காதலுக்கு மரியாதை, ஷாஜகான், திருமலை, அஜித்தின் வாலி, சிட்டிசன், பில்லா, காதல் மன்னன், சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுஷின் வட சென்னை, 3, யாரடி நீ மோகினி, விஜய் சேதுபதியின் 96, ஜீவாவின் சிவ மனசுல சக்தி, பிரபு தேவாவின் மின்சாரக் கனவு என ஏகப்பட்ட படங்கள் அடங்கும். இதில் பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. 

இதுபோக கில்லி படம் அடுத்த மாதம் ரீ ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து ஹிட்டடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவதால் மேலும் பல சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்