![Rashmika Mandanna responds to trolls](http://image.nakkheeran.in/cdn/farfuture/fL_LcLDnW7LWGiiFDlT_J-nokcaxkhjjMkJR82-XHsQ/1670659527/sites/default/files/inline-images/22_78.jpg)
தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இதனிடையே இந்தியில், 'மிஷன் மஜ்னு', 'அனிமல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் நடிக்கவுள்ளார். இதில் 'வாரிசு' படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/LaTwA8sc1w8FUrmAjoELo0RAcE-LFx6hwQjRZLiM8bg/1670659471/sites/default/files/inline-images/500x300_40.jpg)
கன்னட திரைத்துறையில் அறிமுகமான ராஷ்மிகா, தெலுங்கில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் கன்னட ரசிகர்கள் ராஷ்மிகா மீது சற்று கோபத்தில் இருந்தார்கள். பின்பு ஒரு பேட்டியில், ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'காந்தாரா' படத்தைப் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு, "நான் இன்னும் பார்க்கவில்லை" எனப் பதிலளித்திருந்தார். ராஷ்மிகாவின் இந்தப் பதில் ரசிகர்களின் கோபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது.
திரைத்துறையில் ராஷ்மிகா அறிமுகமான 'கிரிக் பார்ட்டி' படத்தை இயக்கியது ரிஷப் ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராஷ்மிகா கன்னட திரையுலகை மறந்துவிட்டதாகவும், அவர் இனிமேல் கன்னட படங்களில் நடிக்கக்கூடாது எனவும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருது தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தன்னை பற்றி எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து ராஷ்மிகா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "விமர்சனம் செய்பவர்களுக்கு அன்பை மட்டுமே என்னால் தரமுடியும். வேறு என்ன கொடுக்க முடியும் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.
காந்தாரா படம் வெளியான 2-3 நாட்களே ஆன நிலையில் என்னிடம் படம் பார்த்து விட்டீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது நான் பார்க்கவில்லை. அதனால் அப்படி கூறினேன். ஆனால், இப்போது படம் பார்த்துவிட்டேன். படக்குழுவிற்கும் அதனை சொன்னேன். உடனே அவர்களும் சொன்னதற்கு நன்றி தெரிவித்தனர். பொதுவாக வெளியுலகத்திற்கு, உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாது. எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பதை கேமரா மூலம் வெளியிலும் காட்ட முடியாது. இதுவரை எந்தத் தயாரிப்பாளரும் நான் நடிப்பதற்கு தடை கூறவில்லை" எனச் சற்று வேதனையுடன் பேசினார்.