சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளடக்கிய இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
இதில் ஆடவர் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்ட லக்சயா சென் அரையிறுதி வரை சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் மலேசிய வீரர் லீ ஸி ஜியாவிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார். இருப்பினும் லக்சயா சென் விளையாட்டிற்கு இந்திய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு அறுதலும் கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே பிரபல பேட்மிட்டன் வீரரும் நடிகர் ரன்வீர்சிங்கின் மாமனாருமான பிரகாஷ் படுகோன், “வீரர்கள் போதுமான அளவு கடினமாக உழைக்கிறார்களா என்று தங்களைத் தாங்களே அவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த வீரர்கள் அனைவருக்கும் அவர்களின் சொந்த வேலைகளும் மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளன. அமெரிக்கா உட்பட வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு வசதிகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” எனச் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். இதையடுத்து இவரது பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து சில வீரர்கள் லக்சயா சென்னிற்கு ஆதரவாகப் பேசினர்.
இதனைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், லக்சயா சென்னிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சிறந்த வீரர். அவருடைய சகிப்புத்தன்மை, சுறுசுறுப்பு, விளையாடும் விதம், கவனத்துடன் இருப்பது என அனைத்திலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டார். இந்த ஒலிம்பிக்கில் அவர் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருந்தார் என்பதை விவரிப்பது கடினம். நூலிழலையில் அவர் வெற்றியை தவறவிட்டார். ஆனால் அவருக்கு வயது 22 தான், இப்போதுதான் அவர் விளையாடவே தொடங்கியிருக்கிறார். இன்னொரு நாள் விளையாடு. உன்னை நினைத்துப் பெருமைப் படுகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.