![ram pothineni apologies director lingusamy](http://image.nakkheeran.in/cdn/farfuture/NQ5e97Wl8PpmdDXdHAkIf6GGqBEXcrUxt9rQM8H4Uyk/1656069669/sites/default/files/inline-images/1040_0.jpg)
இயக்குநர் லிங்குசாமி பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தி வாரியர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, ஆதி, நதியா, ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான புல்லட் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் சிம்பு பாடியிருந்தார். இப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராம் பொத்தினேனி படம் சம்மந்தப்பட்ட அனைவரையும் பாராட்டி நன்றி தெரிவித்தார். ஆனால் படத்தை இயக்கிய லிங்குசாமியை பற்றி நடிகர் ராம் பொத்தினேனி நன்றி கூறவில்லை. இதை பார்த்த ரசிகர்கள் இயக்குநருக்கும், ராம் பொத்தினேனிக்கும் ஏதாவது பிரச்சனை இருக்கும் அதனால்தான் நன்றி கூறவில்லை என்று சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.
இந்நிலையில் நடிகர் ராம் பொத்தினேனி இயக்குநர் லிங்குசாமியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "என்னுடைய வாரியர், என்னுடைய இயக்குநர் லிங்குசாமி. அவரை பற்றி பேசுவதற்கு மறந்து போனது எவ்வளவு பைத்தியக்காரத்தனம். நான் இதுவரை பணியாற்றிய சிறந்த இயக்குநர்களில் லிங்குசாமியும் ஒருவர். உங்களை பற்றி பேசாமல் போனதற்கு மன்னித்து விடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.