தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில், திமுக மற்றும் அரசு சார்ப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் கலைஞர் நூற்றாண்டு விழா திமுக நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கலைஞரின் நினைவிடத்தில் “கலைஞர் உலகம்" என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். மேலும் திரைத்துறையில் கலைஞர் ஆற்றிய பணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, திரைத்துறை சார்பில் ‘கலைஞர் 100’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பல நடிகர்கள் பங்கேற்று கலைஞர் உடனான அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
இதையடுத்து கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நினைவையொட்டி அவரின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வெளியீடு கடந்த 18ஆம் தேதி நடந்தது. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார். நாணயத்தில் ஒரு புறம் கலைஞரின் உருவம் பொறிக்கப்பட்டு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 - 2024’ வரிகள் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என்ற மதிப்பு வரி இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு கலைஞர் ரூ.100 நாணயம் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கியுள்ளார். முன்னதாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவிற்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, ஆனால் அதில் இருவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.