![thavasi](http://image.nakkheeran.in/cdn/farfuture/W9Yh8XPOtK6AaxnBOTBouvzwIrpp24H8KIMGh9jG9gk/1605683113/sites/default/files/inline-images/thavasi-actor_2.jpg)
'கருப்பன் குசும்புக்காரன்' என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் தவசி. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில், சூரிக்கு அப்பாவாக இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பெற்றது, ரசிக்கப்பட்டது. இவர் பாரதிராஜாவின், 'கிழக்குச் சீமையிலே' படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.
கிடா மீசையில் பல படங்களில் நடித்து வந்த தவசி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தவசி குறித்து பேசியவர், புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படுவதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார். நடிகர் தவசியின் மகன் சமூக வலைதளத்தில் பண உதவி கேட்டு வேண்டுகோள் வைத்தார்.
அவரின் நிலையை அறிந்த, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான சரவணன், அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் தவசிக்கு மருத்துவ உதவிசெய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் அலுவலகத்தில் இருந்து பேசிய அவரது மேலாளர், நடிகர் ரஜினிகாந்த் கூறியதன் அடிப்படையில் தவசியின் உடல்நலத்தை குறித்து விசாரித்ததாகவும், தேவையான உதவிகளை ரஜினி சார் கண்டிப்பாக செய்வார் என தவசியின் குடும்பத்தாரிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.