Skip to main content

"இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத..." - விடுதலை படத்தை பாராட்டிய ரஜினி

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

rajini about vetrimaaran viduthalai

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர். 

 

இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி உள்ளிட்டோர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழில் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் அல்லு அரவிந்த் வெளியிடுகிறார். வருகிற 14 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே மக்களுக்கு நன்றி தெரிவித்து விடுதலை 2 விரைவில் வரும் என சூரி அறிக்கை வெளியிட்டிருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து சக்சஸ் மீட் நடத்தியது படக்குழு. இதில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். 

 

இந்த நிலையில் ரஜினிகாந்த் விடுதலை-1 படத்தைப் பார்த்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விடுதலை... இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் - தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், வெற்றிமாறன், சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் எஸ்.தாணு ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்