![rajini 170 update](http://image.nakkheeran.in/cdn/farfuture/CHttSX-KvOeigaZAtp-CbgxgexPK8iGjr-O8rD0IIL8/1696082414/sites/default/files/inline-images/267_10.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ரூ. 650 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்த நிலையில் ரஜினியின் 170வது படம் பற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.