தனியார் தொலைக்காட்சி பாட்டுப் போட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கிராமிய பாடகர் ராஜலட்சுமி முதன்மைக் கதாபாத்திரமாக நடித்த லைசென்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ராஜலட்சுமி பேசியதாவது, “எனக்கு முதல் பிரசவத்தின் மூலம் பெற்ற குழந்தையை கையில் தாங்கிய மகிழ்ச்சியை போலவே இந்த லைசென்ஸ் படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. மேலும், என்னுடைய முதல் பெரிய நன்றியை இந்த படத்தின் இயக்குநரான கணபதி பாலமுருகனுக்குத்தான் தெரிவிக்கிறேன். ஏனென்றால் தமிழ் சினிமா துறையில் இத்தனை நடிகைகள் இருக்கின்றபோது என்னை தேர்வு செய்தது எனக்கு புதுமையாக இருந்தது. இயக்குநர் முதலில் எனக்கு படத்தின் கதையை சொன்னபோது என் நாற்காலியின் நுனியில் அமர்ந்துதான் கேட்டேன். அந்த அளவுக்கு கதை மிகவும் பிரமாதமாக இருந்தது. மேலும், இந்தக் கதையின் முதன்மைக் கதாபாத்திரமாக என்னைத் தேர்வு செய்தது என்னை இன்னும் ஆச்சரியமாக்கி இருந்தது.
என் வாழ்வில் கற்பனை கூட செய்ய முடியாத கதாபாத்திரத்தில் தேர்வு செய்தது இயக்குநரின் நம்பிக்கையின் மீது எனக்கு இன்னும் மரியாதை ஏற்பட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளரான ஜீவானந்தம் அவர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை அலாதியானது. இந்த நிகழ்ச்சிக்கு என் கணவர் செந்தில் வரமுடியாததுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். ஏனென்றால் எங்களின் பிரதானமான நாட்டுப்புற பாடலில் தான் எங்களுக்கு முழுக் கவனம் இருக்கும். மேலும் இந்த மே மாதம் முழுவதும் எங்களுக்கு நிகழ்வு இருந்து கொண்டே இருக்கும். அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் மட்டும் வந்தேன். என்று கூறினார்.