![gsdg](http://image.nakkheeran.in/cdn/farfuture/XvFK7XoJzQM-4Kfn4KU2yj3vQyDtZHCTXbOfJVdM8Wo/1589021473/sites/default/files/inline-images/Vijay-sethupathi-c-prem-kumar-devadarshini-at-the-96-success-meet-photos-0018.jpg)
கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அரசுக்கும், மக்களுக்கும் மற்றும் திரையுலகினருக்கும் நிதியுதவி அளித்து வருகிறார். இதற்கிடையே ராகவா லாரன்ஸ் நேற்று கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயாரின் உடலை அடக்கம் செய்ய கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் ராகவா லாரன்ஸின் அறிக்கைக்கு செவி சாய்த்த கேரள மருத்துவமனை பத்திரிகையாளர் அசோக் தாயாரின் உடலை அவரது மகனிடம் ஒப்படைத்ததற்கு நன்றி தெரிவித்து ராகவா லாரன்ஸ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
''மருத்துவமனைக்கு நன்றி”
“முடக்கு வாதம் மற்றும் இன்னும் பிற நோய்க்காரணிகளால் கேரள NIMS தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தமிழக பத்திரிகையாளர் அசோக் என்பவரது தாயார் மருத்துவமனையிலேயே இறந்துவிட்ட நிலையில், வறுமையில் வாடும் அந்த பத்திரிகையாளர் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணத்தை கட்ட முடியாமல் அவதிப்படுவது குறித்து அவரது நண்பர் மூத்த பத்திரிகையாளர் கொ. அன்புகுமார் அவர்கள் மூலம் அறிந்து, உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் மருத்துவ கட்டணத்தை குறைத்து தரச்சொல்லி வேண்டுகோள் விடுத்தோம். அவர்களும் ரூ.40,000 தள்ளுபடி செய்து ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு, அசோக்கின் தாயாரது உடலை மருத்துவ பரிசோதனை செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். எனது கோரிக்கையை ஏற்று கட்டணத்தை குறைத்துக் கொடுத்த மருத்துவமனை MD அவர்களுக்கு நன்றிகள். தற்போது அசோக்கின் தயாரது உடல் தகனம் செய்யப்பட்ட செய்தியையும் அறிந்தேன். இதற்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் திரு. சாய் ரமணி, மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் திரு. லிஸ்டின், பத்திரிகையாளர் திரு.கொ.அன்புகுமார், எனது உதவியாளர் திரு.புவன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.
மனிதநேயம் தழைக்கட்டும்!!!
நன்றி
ராகவா லாரன்ஸ்''
என குறிப்பிட்டுள்ளார்.