![pt selvakumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/f42U1F7E-o6QWXRtj9Y-I-wHw-tqaoatg-6QRG6Q2mU/1592897111/sites/default/files/inline-images/pt-selvakumar.jpg)
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 108 பெண்களுக்கு ஆட்டுக்குட்டிகள் மற்றும் அரிசிமூட்டைகள் வழங்கி பி.டி. செல்வகுமார் உதவி செய்துள்ளார்.
கரோனா வைரஸ் தொடங்கிய நாட்களில் இருந்தே கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்கள். நேற்று நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மாவட்டம் மைலாடி, தோவாளை, நெல்லை மாவட்டம் வள்ளியூர், பூச்சிக்காடு ஆகிய இடங்களில் ஏழை எளிய பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 108 பேருக்கு ஆட்டுக்குட்டிகள் மற்றும் 108 பெண்களுக்கு அரிசிமூட்டைகளை கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவரும் இயக்குனருமான பி.டி. செல்வகுமார் வழங்கினார்.
பின்னர் இதுகுறித்து தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் பேசுகையில், “கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கரோனா என்னும் கொடிய வைரஸ் தொடங்கியது முதல் இன்றோடு அறுபது நாட்கள் தொடர்ச்சியாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறோம், இன்று(23-06-20) இளையதளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த இக்கட்டான சூழ்நிலையில் வறுமையில் தவித்து வரும் 108 பெண்களுக்கு ஆட்டுக்குட்டிகளும் மற்றும் 108 பெண்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கினோம், இந்த ஏழை எளிய மக்கள் மூச்சுத் திணறும் அளவுக்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள், தொழிலதிபர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் இவர்களுக்கு உதவ வேண்டும் இதுவே இறைவனுக்குச் செய்யும் தொண்டு ஆகும்.
நடிகர் விஜய் ஜாதி மத பேதமின்றி அனைவருடனும் அன்பாகப் பழகக்கூடியவர். இந்தியா முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு கலைஞன், அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு எந்த நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் இந்த ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்தோம் என்று கூறினார்.