![rygsr](http://image.nakkheeran.in/cdn/farfuture/yu9wrdvNFQIf5Ss1rbWFL9Z5UY-cdqPgJJDcXjK69PI/1590733356/sites/default/files/inline-images/1b7ca7f2-9924-4c6e-b13c-fe284f3ccdf1.jpg)
கரோனா பாதிப்பால் பாதிக்கபட்ட மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து உதவி வருகிறது. இன்று கோவில் நடைபாதை வியாபாரம் செய்யும் 110 பெண்களுக்கு கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் அரிசி மூட்டைகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வழங்கினார். மேலும் தமிழகம் முழுவதும் கோவில்களைத் திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனுக்கள் வழங்கிய அவர் பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து பேசிய போது...
இங்கே 100 அபலை பெண்களின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன். புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர், திருப்போரூர் முருகன் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் போன்ற அனைத்து வழிபாட்டு ஸ்தலங்களும் கடந்த 60 நாட்களாக கரோனா பிரச்சனையால் மூடி கிடக்கின்றன. பக்தர்கள் குறிப்பாகப் பெண்கள் கோயில்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் மனஉளைச்சலில் உள்ளனர். இதனால் வீட்டில் எதிர்மறை சக்திகளால் சண்டை சச்சரவு ஏற்பட்டு பலரும் மனநோயாளிகள் ஆகும் அளவிற்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள். உலகிலேயே இந்தியா சிறந்த இறைநம்பிக்கை மிகுந்த நாடு. மக்கள் நம்பிக்கையோடு இறைவனை வேண்டினால் நாட்டு மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் விலகும். கண்ணுக்குத் தெரியாத கரோனா என்ற எதிரியை ஒழிக்க ஒன்றுபட்ட மக்களின் இறைவழிபாடு அவசியமாகிறது. அது மட்டுமின்றி காலை மாலை அனைவரும் குளித்து சுத்தமாகக் கோயிலுக்கு வருவதால் சுகாதார பிரச்சனை எழாது. குறிப்பாகக் கோயில் வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள பூசாரிகள், ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி அரசுக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான காணிக்கை வரவு தடைபட்டுள்ளது.
ஆகவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும், கலெக்டர் பெருமக்களும் கோவில்களைத் திறந்து மக்கள் வழிபட வழி செய்ய வேண்டும். தவறினால் ஆயிரகணக்கான பெண்கள், பொது மக்கள் உதவியுடன் கலப்பை மக்கள் இயக்கம் போராடும். உண்ண உணவின்றி, செலவுக்குப் பணமின்றி, வேலை தொழில் செய்ய வழியின்றி மக்கள் அணுஅணுவாக சித்திரவதை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதலையும், நிம்மதியையும் தருவது கோவில்கள் மட்டுமே. கரோனா விழிப்புணர்வு அனைத்து மக்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே கட்டுப்பாடுடன் கண்ணியத்துடனும் நடந்து கொள்வார்கள் என நாங்கள் நம்பிக்கை அளிக்கிறோம். தாங்களும் தகுந்த பாதுகாப்பு, கட்டுப்பாடுகளுடன் ஆலயங்கள், மசூதிகள் தேவாயங்களைத் திறந்து மக்களுக்கு நிம்மதியைத் தாருங்கள்'' என்று பி.டி செல்வகுமார் பேசினார்.