![prithviraj](http://image.nakkheeran.in/cdn/farfuture/mpy1wqttQInCYv0RcTGruxoK-fzpA7mD1D1VVblpMrU/1590985254/sites/default/files/inline-images/prithviraj%20_0.jpg)
நடிகர் ப்ரித்விராஜ், ப்ளெஸ்ஸி இயக்கத்தில் நடித்து வரும் படம் 'ஆடுஜீவிதம்'. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜோர்டான் நாட்டிலுள்ள பாலைவனத்தில் நடைபெற்று வந்தபோது கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. அதனால் 58 பேருடன் 'ஆடுஜீவிதம்' படக்குழு ஜோர்டான் நாட்டின் பாலைவனத்திலேயே சிக்கிக்கொண்டது.
மத்திய அரசின் வந்தே பாரத் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களைத் தாய்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், ஜோர்டன் நாட்டிலிருந்த 187 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர். இதில் 'ஆடுஜீவிதம்' குழுவினரும் அடக்கம்.
அண்மையில் கேரளா வந்தடைந்த படக்குழுவினர் அனைவரும் தங்களை 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டனர். இதில் படத்தின் கதாநாயகனான ப்ரித்விராஜும் அடங்குவார். இதைத் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் அப்போது பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தனிமைப்படுத்துதலுக்கான 7 நாட்கள் முடிவடைந்துவிட்ட பின்னர் அடுத்து வீட்டிற்குச் சென்று தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
அதில், "எனது 7 நாட்கள் கட்டாயத் தனிமைக் காலம் இன்று (30ஆம் தேதி) முடிகிறது. 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்கவுள்ளேன். ஓல்ட் ஹார்பர் ஹோட்டலுக்கும் அங்கு இருக்கும் அற்புதமான பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கும் பெரிய நன்றி.
பி.கு - வீட்டுத் தனிமைக்குப் போகும் அல்லது ஏற்கெனவே இருப்பவர்கள் நினைவில் கொள்ளுங்கள். வீட்டுக்குச் செல்வதென்றால் தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலம் முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல" என்று அந்தப் புகைப்படத்தோடு பகிர்ந்துள்ளார்.
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/6ivcz__3NP0Kg7DKSZn9v4NaT8EzjPE1uO3Obz6YN1s/1590822160/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01.gif)
தனிமைக் காலத்துக்கான விதிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றுங்கள். அதிகாரிகள் வரையறை செய்துள்ள அதிக பாதிப்பு கொண்டவர்கள் யாரும் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள்" என்றும் ப்ரித்விராஜ் கூறியுள்ளார்.