கவின் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான ஸ்டார் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ப்ரீத்தி முகுந்தன். இப்போது முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் பெரிய பட்ஜெட் திரைப்படமான ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதனிடையே திரைப்படம் மட்டுமின்றி தனி இசை பாடலில் கவனம் செலுத்தி வந்த ப்ரீத்தி முகுந்தன், ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு மூத்த மகனாக நடித்த டீஜே அருணாசலம் இயக்கிய ‘முட்டு முட்டு -2’ என்ற தனி இசை வீடியோ பாடலில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ‘கட்சி சேர...’ தனி இசை வீடியோ பாடல் மூலம் பிரபலமான சாய் அபியங்கருடன் கை கோர்த்து ‘ஆச கூட வாசம் வீசும்...’ என்ற தனி இசை வீடியோ பாடலில் நடித்துள்ளார். இந்த பாடலை இன்றளவும் பார்வையாளர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலில் ப்ரீத்தி முகுந்தனின் டான்ஸ் எல்லோரிடமும் கவனம் பெற்றது.
இந்த நிலையில் தனியார் கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ப்ரீத்தி முகுந்தன் பங்கேற்றார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து, அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பதிலளிக்கையில் “தமிழில் இரண்டு திரைப்படங்களில் நடிக்க பேசி வருகிறேன். மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறேன். அந்த படங்களைப் பற்றி என்னால் இப்போது சொல்லமுடியாது, விரைவில் அது குறித்து தெரிவிக்கிறேன்” என்றார். அதன் பின்பு எந்த இயக்குநருடன் பணியாற்ற ஆசை? என்ற கேள்விக்கு அவர், “பா.ரஞ்சித் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஏனென்றால் அவர் எப்போதும் உலகப் பார்வையில் திரைப்படங்களை எடுக்கிறார். அது மட்டுமின்றி அந்த படங்களில் ஆழமான கருத்துகள் இருக்கும். அதனால் அவருடன் பணியாற்ற ஆசைப்படுகிறேன்” என்றார்.