![police Complaint against Kamalhaasan Pathala Pathala song](http://image.nakkheeran.in/cdn/farfuture/P86vgBHvrxGZZF3qkwfyc9sULfl-KFzfprjyM7eUOD4/1652358137/sites/default/files/inline-images/531_1.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வரும் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் விக்ரம் படத்தில் கமல் எழுதி பாடியுள்ள பத்தல பத்தல பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்பாடல் யூடியூபில் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இருப்பினும் இந்த பாடல் மத்திய அரசை நேரடியாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அந்த பாடலில் இடம்பெற்றுள்ள “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே சாவி இப்போ திருடன் கையிலே" என்ற வரிகள் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் 'பத்தல பத்தல' பாடலில் சில வரிகளை நீக்குமாறு நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கமல் எழுதி பாடிய 'பத்தல பத்தல' பாடலில் சில வரிகள் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையிலும், சாதிய ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையிலும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.