'ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே இரவின் நிழல் படத்தில் நடித்த பிரிகிடாவின் பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. படம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த பிரிகிடா, “இரவின் நிழல் படம் ஒரு தனிமனிதன் பற்றிய கதை. அவனது வாழ்க்கையில் வெறும் கெட்டது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதை ராவாகத்தான் சொல்ல முடியும். இப்போ ஒரு சேரிக்கு சென்றோம் என்றால் அந்த மாதிரியான வார்த்தைகளை மட்டும் தான் கேட்க முடியும். மக்களுக்கே தெரியும் அவர்கள் எப்படி பேசுவாங்கன்னு. அதை சினிமாவுக்காக எல்லாம் ஏமாற்ற முடியாது” எனக் கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சு சர்ச்சையானதோடு எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பியது.
இந்நிலையில் நடிகை பிரிகிடா அவரின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “இடத்தை பொறுத்து மொழி மாறுபடும் என்று தான் கூற வந்தேன், ஆனால் அது இப்படி தவறாக மாறிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பிரிகிடாவின் பேச்சுக்கு நடிகர் பார்த்திபனும் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், “பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே” எனத் தெரிவித்துள்ளார்.
Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே! https://t.co/NSq3LNaYt7— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 17, 2022