இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 2 ஆம் தேதி தனது 80வது வயதில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு அவருக்கு அன்று இரவு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய சீமான், இளையராஜாவை புகழ்ந்து தள்ளினார். அப்போது, "இளையராஜா என்பது இசைப் பல்கலைக்கழகம். இசை படிக்க வேண்டும் என்றால் இளையராஜாவை படிக்க வேண்டும். பார்த்திபன் ஒரு இடத்தில், இசை அலை இளையராஜா எனக் குறிப்பிட்டிருப்பார். அது சரியான வார்த்தையாக நான் பார்க்கிறேன்" எனப் பேசியிருந்தார்.
அந்த வீடியோவை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சீமானைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், "அம்மேடையில் நானில்லை; ஆனால் பெயர் பெற்றேன். காரணம் ஒரு மேதைமையை என் பேதைமையில் மிக எளிமையாக but அதை விடப் பொருத்தமாக யாரும் பாராட்டிவிட முடியாத வார்த்தைகளில் நான் செதுக்கியதை ‘தமிழ் பேச்சின் சீமான்’ பிரயோகிக்கும் போது புல்லரித்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.