Skip to main content

”அடுத்த ரஜினி நாந்தான்னு நெனச்சேன். ஆனா...” - பார்த்திபன் சொன்ன பழைய கதை

Published on 10/07/2019 | Edited on 11/07/2019

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் 89வது பிறந்தநாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாசினி, ஆர். பார்த்திபன், இயக்குநர் வசந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு பாலசந்தர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். 
 

parthiban

 

 

அப்போது பேசிய பார்த்திபன், “கமல் சாருக்கு சிவாஜி சார் எப்படியோ! அதுபோல எனக்கு கமல் சார். அதிலும் பாலசந்தர் சார் படத்தில் கமல் பேசிய வசனங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். மயிலாப்பூர், வாரன் சாலையிலுள்ள பாலசந்தர் அலுவலகத்துக்கு எதிரே நின்று கொண்டே இருப்பேன். இயக்குநர் வந்ததும் அவரிடம் நடித்துக் காட்டவேண்டும், பேசிக்காட்ட வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். ஆனால் அவர் கார் வரும் போது, ஒளிந்துகொள்வேன்.


இந்த சமயத்தில்தான், கவிதாலயா தயாரிப்பில் உருவான புதுக்கவிதை படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் ஐந்தாறு காட்சிகளில் வருவேன். சின்ன கேரக்டர்தான். படத்தை ரஷ் பார்த்த பாலசந்தர் சார், ‘இந்தப் பையன் யாரு, கண்ணு ரொம்ப நல்லாருக்கு. இவன் மேல கண்ணு வைச்சுக்கணும். பெரியாளா வரப்போறான்’ என்று சொன்னதாக, பிரமிட் நடராஜன் சார் சொன்னார்.


அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘சரி... அடுத்த ரஜினி நாமதான். பாலசந்தர் சார், நம்மளை உயரத்துக்குக் கொண்டு வராம விடமாட்டாரு’என்று துள்ளி குதித்தேன். ரஜினி மாதிரியே நாமளும் கருப்புதான் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனா படம் வந்தபோது அந்த சீனே படத்துல இல்ல” என்று கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் தந்தைக்கு நிகரான ஆசிரியர்” - கமல்ஹாசன் நினைவு கூரல்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
kamalhassan about balachander

தமிழ் சினிமாவில் 'இயக்குநர் சிகரம்' என போற்றப்பட்டவர் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர். தன் படங்களில் பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வந்தார். இதுவரைக்கும் 8க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளையும், தமிழக அரசு வழங்கும் கலைமாமணி, அறிஞர் அண்ணா விருது உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கியவர். 

இவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் திரை பிரபலங்கள் உட்பட பல ரசிகர்களும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், “அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர்; எத்தனையோ நடிப்புக் கலைஞர்களைத் திரைக்குத் தந்த திண்மையாளர்; தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். இன்று அவரது நினைவு நாள். என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

Next Story

“ஒரு கட்சி சார்ந்த சாடல் அல்ல” - மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

parthiban about cyclone michaung chennai flood

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இதனிடையே திரை பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருகிறார்கள். மேலும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும் நிதியுதவி அழித்து வருகின்றனர். இந்த நிலையில் பார்த்திபன் பாதிக்கப்பட்டோரின் வீட்டிற்கு நேரடியாக சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்பு இந்த மழை பாதிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன். ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா குண்டுங்குழி நிறைந்த மும்பாபையிலும்(பணக்கார முதலைகள் சாலையை கடக்கும் மாநிலம்)இதே நிலை. தனி மனிதனாகவும்,தமிழ்நாடாகவும்,வல்லரசு(?)

 

நாடாகவும், இந்தியா தன்னிறைவடையாத (தண்ணீரும் வடியாத)நாடு! தண்ணீர் இருக்கிறதா?என ஆராய,சந்திரனுக்கு சந்திரயானும்,செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்?ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் லேக் வியூவ் அப்பார்ட்மெண்ட்ஸ்-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே? அதிவேக புல்லட் ரயில், அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம் இப்படிப்பட்ட நாளைய இந்தியப் பெருமையில் எருமை urine போக! அடிப்படை தேவைகள், வேலை வாய்ப்புகள், சாலை வசதிகள், மாசற்ற காற்று, இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் இடரற்ற சக்தி, ஏழை மக்களும் எதற்கும் கையேந்தாமல் கவுரவமாக வாழும் உயர்நிலை இவைகளை வழங்க, வழங்கும் வரி பணத்தையெல்லாம் பயன்படுத்திவிட்டு பின்பு வுடலாம் ராக்கெட்டு! 

 

ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்ட போது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலையில் சுதந்திர தின மூவர்ண பல்லி மிட்டாய்களும், குடியரசுதின பைக் சாகச கொண்டாட்ட செலவினங்கள் எதற்கு? ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, ஃபேஷன் ஷோ எதுக்கு? இப்படி நூறாயிரம் கேள்விகளில் தூக்கம் தொலைந்தது. நானோ, கேபிஒய் பாலாவோ, அறந்தாங்கி நிஷாவோ இன்னும் சிலரின் உண(ர்)வு பொட்டலங்கள் செய்திக்கு செய்தி சேர்க்குமே தவிற, அடுத்த வேளை அடுப்புக்கு நெருப்பும், அதில் பொங்க அரிசியும் சேர்க்காது. சமீபத்தில் கீர்த்தனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்… இன்னும் 50 ஆண்டுகளில் என் காலத்திற்கு பிறகும் இந்தியாவிலேயே பறக்கும் கார்கள்(இப்போது மிதக்கும் கார்கள்) போன்ற அதியற்புத வளர்ச்சியை காணலாமென. அதை விட… இந்திய வரைபடத்தில், வறுமை கோடும் அதனடியில் சில எலும்புக் கூடும் வாழும் நிலை மாற வேண்டும். 

 

(நான் குற்றஞ்சுமத்துவது அரசியல்வாதிகளை அல்ல. பொருளாதாரம் சார்ந்த அரசியலை. அதை சீர் செய்ய தொலைநோக்குள்ள தன்னலமற்றவர்கள் தகுதி பெற வேண்டும்!) இது ஒரு தனிமனித சிந்தனை. எனவே தவறு இருக்கலாம். இருப்பின் பொருட்படுத்தாதீர்கள். இன்றும் இயன்றதைச் செய்து இடர் குறைப்போம்” என வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மற்றொரு பதிவில், “தேர்ந்தெடுக்கும் உடைகளில் ஒருவரது நாகரீகமும், பயன்படுத்தும் வார்த்தைகளில் அவர்களது தரமும் விளங்கும். என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அது தனிநபர் தாக்குதலோ, ஒரு கட்சி சார்ந்த சாடலோ அல்ல. சுதந்திர இந்தியாவை இதுவரை பல கட்சிகள் ஆண்டுள்ளன. இன்றைய நிலைக்கு இதுவரை யாவும் காரணம். இது மாற…இனியொரு விதி செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.