நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது ட்வீட்டில் இருந்து, தான் இயக்கும் திரைப்படங்கள் வரை எதாவது ஒரு புதுமை இருக்க வேண்டும் என்று சோதனை முயற்சியாகவே படம் எடுக்கக்கூடியவர். அப்படி அவர் அண்மையில் நடித்து இயக்கிய படம்தான் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. ஒரு முழு நீள திரைப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து மட்டும் இயக்கியிருப்பார். தமிழ் திரைப்படத்துறையில் இது ஒரு முதல் முயற்சி என்றே சொல்லலாம்.
![parthiban](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZHSgU8KlGuyfAsagvy3RXqb4d9_54RQ-xmuxpU3opXM/1577945367/sites/default/files/inline-images/r-parthiban.jpg)
இப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது. இதில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ரஸூல் பூக்குட்டி சவுண்ட் டிசைன் செய்திருப்பார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றியிருப்பார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருக்கும், படமும் அனைவரையும் கவர்ந்தது என்பதால் திரை பிரபலங்களில் தொடங்கி அனைவரும் பாராட்டினார்கள்.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் இயக்குனர் பார்த்திபன். இம்முறையும் வித்தியாசமான சோதனை முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறார். முழு நீள திரைப்படத்தை ஒரே ஷாட்டில் முழுப் படத்தையும் எடுக்கவுள்ளார். உலக அளவில் பலரும் இந்த முயற்சியைச் செய்திருந்தாலும், ஆசியாவில் பார்த்திபன்தான் இந்த முயற்சியை முதலில் முயற்சி செய்கிறார் என்று சொல்லப்படுகிறது. 'இரவின் நிழல்' என இந்த படத்திற்கு பெயரிட்டு, அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பலரும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதும் பார்த்திபன் எடுக்கப்போகும் இந்த முயற்சிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.