![Operation Arapima trailer release function](http://image.nakkheeran.in/cdn/farfuture/RTVNTnA1kY_q0ZhP9wjXJUjQmMow4Iuuy-Sa1WU3ipw/1678259955/sites/default/files/inline-images/132_30.jpg)
முன்னாள் கப்பல்விடை வீரர் பிராஷ், 'ஆபரேஷன் அரபைமா' படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இதில் ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். நேற்று ( 07.03.2023) இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
இயக்குநர் பிராஷ் பேசும்போது, "பெற்றோருக்கு தெரியாமல் சினிமாவை கற்றுக் கொண்டேன். இருப்பினும், கடலோரக் காவற்படையில் தேர்வானேன். அதிக நாட்கள் சென்னையில் தான் இருந்தேன். கப்பல்படை, விமானப்படை, தரைப்படை என மூன்று படைத்தளங்களிலும் பணியாற்றிய அதிர்ஷ்டசாலி நான் என்று நினைக்கிறேன். அதன் பின் ஒரு விபத்தில் சிக்கினேன். நான் அந்த விபத்திலிருந்து மீண்டு வந்ததற்கு காரணமே அப்துல் கலாம் ஐயாவின் “விங்ஸ் ஆப் பயர்” புத்தகம் தான். அந்த புத்தகத்தை படித்துவிட்டு, நான் அப்துல் கலாம் ஐயாவை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து, அவருக்கு கடிதம் எழுதி அவரைச் சந்தித்தேன்" என்றார்.
நடிகை நேஹா சக்ஸேனா பேசும்போது, "நான் பஞ்சாபி பெண். ஆனால், தமிழ் படிக்க வேண்டும், பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என் அப்பா என்னுடைய சிறு வயதில் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். என் அம்மா தான் என்னை வளர்த்தார். வாழ்க்கையில் முன்னேற ஏதாவது ஒரு லட்சியம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அம்மா கூறினார். பல மொழிகளில் 12 வருடங்களாக நடித்து வருகிறேன். சினிமாவிற்கு மொழிகள் கிடையாது. ஒரு மாநிலத்திற்குள் நாம் வேலைக்காக அல்லது நம் தேவைக்காக செல்லும்போது அந்த மாநிலத்தின் மொழியை நாம் கற்றுக்கொள்வது அந்த மாநிலத்திற்குச் செய்யும் மரியாதை." என்றார்.