![nitin sathya](http://image.nakkheeran.in/cdn/farfuture/vzn0gHskl2oa7uqsa-5mwmBtOsxcFX3SNM5p_0m6e1Q/1596543806/sites/default/files/inline-images/nitin-sathya.jpg)
'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பாட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது இந்த வருட ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
தற்போது கரோனா வைரஸ் பரவலால் இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுபெறாத நிலையில் இந்தத் தேதியிலும் பட வெளியீட்டுக்குச் சாத்தியமில்லை என்பதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. கரோனா ஊரடங்கு முடிந்து சகஜ நிலைக்குத் திரும்பியவுடன் புதிய தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட அதிக வாய்ப்பிருப்பதாகவும் ஒருபுறம் கூறப்படுகிறது.
இதனிடையே இப்படத்தில் தமிழ் நடிகர் நிதி சத்யா வில்லனாக நடிப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் நிதின் சத்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், “இந்தச் செய்தியை யார் பரப்பினார்கள் என்றே தெரியவில்லை. இதில் துளி கூட உண்மையில்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்' என்று கூறியுள்ளார்.