23ஆம் தேதி நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த அண்மையில் உத்தரவிட்டிருந்தார் தென்சென்னை மாவட்ட பதிவாளர். ஆனால், இதை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதன்பின்னர் தேர்தல் சொன்ன தேதியில் நடைபெற அனுமதி அளித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இதையடுத்து, நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சட்டத்திற்கு மேலானவர்கள் எவரும் இல்லை. இறுதி வரை நடிகர் சங்க கட்டிடத்திற்காக போராடுவேன்’ என விஷால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடனான சந்திப்புக்கு பின் நாசர் பேட்டியளித்தார். அதில், “நடிகர் சங்க தேர்தலுக்காக உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். நடிகர் சங்கம் பற்றி முழுமையாக, அனைத்தையும் துணை முதல்வர் கேட்டறிந்தார். இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் ” என்று கூறினார்.