Skip to main content

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா திரைப்படம்

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

nayanthara starring oxygen movie direct ott release

 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா, இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

 

ad

 

இதனிடையே நடிகை நயன்தாரா, இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜி.கே. விக்னேஷ் இயக்கும் ‘ஆக்சிஜன் (o2)’ படத்தில் நடித்துவருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

 

இந்நிலையில், நயன்தாரா நடித்துள்ள ‘ஆக்சிஜன் (o2)’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு பிரபல ஓடிடி தளத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெய் ஸ்ரீராம்...” - வருத்தம் தெரிவித்த நயன்தாரா  

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Nayanthara expresses regret over Annapoorani film issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான அன்னபூரணி படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அன்னபூரணி படம் வெளியான நிலையில், இப்படத்தில் கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக வரும் ஒரு காட்சியை குறிப்பிட்டு, இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னப்பூரணி படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் நடிகை நயன்தாரா இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் ஸ்ரீராம் என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். 

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

நிலவில் ஆக்ஸிஜன்; இஸ்ரோ தந்த தகவல்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

ISRO informs that there is oxygen in the moon

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட்  23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

 

இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும், பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. இதை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.

 

நிலவின் தென் துருவத்தில் வெப்ப நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்த போது, பிரக்யான் ரோவர் தனக்கு முன்னால் பள்ளம் இருப்பதை உணர்ந்து பாதையை மாற்றி பாதுகாப்பாக பயணித்து வருவதாக இஸ்ரோ கடந்த 27 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ரோவரில் உள்ள Laser- Induced Breakdown Spectroscope (LIBS)  என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதைக் கண்டறிந்து சரித்திர சாதனை படைத்துள்ளது.

 

இது தொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலவின் தென் பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மேலும், இது தவிர நிலவில் ஆக்சிஜன் இருப்பதாகவும் கண்டறிந்த ரோவர், தற்போது ஹைட்ரஜன் இருக்கிறதா என்று தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபட்டு வரும் லிப்ஸ் (LIPS) என்ற கருவி பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.