விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, ஃபெமி 9 (Femi 9) என்ற தொழில் நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் சானிட்டரி நாப்கின் பொருளை வழங்கி வருகிறது. இதன் முதலாம் ஆண்டு கொண்டாட்ட விழா கடந்த ஆண்டு சேலத்தில் நடந்தது. இதில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் கலந்து கொண்டு பேசினர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டு கொண்டாட்ட விழா மதுரையில் நடந்தது. இதிலும் இருவரும் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் பேசிய நயன்தாரா, “பொதுவாக ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால், அறிவுரை வழங்குதாக பேச நேரிடும். ஆனால் இங்கு அது தேவையில்லை. நீங்களே இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள். இருந்தாலும் என்னுடைய வாழ்க்கையில் நடந்த இரண்டு விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். ஒன்று தன்னம்பிக்கை. மற்றொன்று சய மரியாதை. எந்த சூழ்நிலையிலும் இந்த இரண்டு விஷயங்களை எப்போதும் விட்டுவிடக்கூடாது. இதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதைத்தான் நீங்களும் பின் தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன். அப்படி பின்பற்றினால் உங்க வாழ்க்கை நன்றாக இருக்கும்.
இந்த இரண்டு விஷயங்களும் நமக்குள் இருந்தது என்றால் அதை விட பெரிய விஷயம் எதுவும் எல்லை. அந்த தன்னம்பிக்கை எப்படி வரும் என்றால், நேர்மையாக உழைக்கிற போது. யார் என்ன சொன்னாலும், நம்மை பற்றி கீழ்தரமாக பேசினாலும், நம்ம கிட்ட தவறாக நடந்துக் கொண்டாலும் அதைப் பற்றி யோசிக்காமல் நம்முடைய வேலையில் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தினால் நமக்குள் தன்னம்பிக்கை இருக்கும். அதன் பிறகு வாழ்க்கையே மாறிவிடும். உண்மையும் உழைப்பும் உயிர் இருக்கும் வரை இருந்தது என்றால் என்றைக்குமே நம்வாழ்க்கை நன்றாக இருக்கும். எந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என என்னால் சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக அதில் தோல்வி இருக்காது” என்றார்.