தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் பல்வேறு சங்கங்கள் இணைந்து, சமீபத்தில் கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பல்வேறு அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றினர். அதில் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளைத் துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தனர். மேலும் வருகிற 16ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளதால் வருகிற 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம், தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை. அவர் மீது எந்த புகாரும் இதுவரை நிலுவையில் இல்லை, எங்களிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்டனத்துக்குரியது என அறிக்கை வெளியிட்டது. இரு சங்கங்களும் அறிக்கை வெளியிட்டது சர்ச்சையானது. இது குறித்து விவாதிப்பதற்காகத் தென்னிந்திய நடிகர் சங்கம், செயற்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அதன்படி நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஸ்ரீமன், சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் இரு சங்கங்களும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணவிருப்பதாகச் சொன்னார்கள். இது குறித்து நாசர் பேசும்போது, “நாங்கள் மாதம் மாதம் நடத்துகிற செயற்குழு கூட்டம் தான். ஆனால் இந்த கூட்டத்திற்கு ஏன் இவ்வளவு பரபரப்பு என்று தெரியவில்லை. திரைப்படத்துறையை வேறொரு தளத்திற்குக் கொண்டு போக முயற்சித்து வருகிறோம். சில நல்ல முடிவுகளை எடுத்திருக்கிறோம். அதைத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பகிர்ந்து கொள்வோம். அந்த முடிவுகளை நாங்கள் நேரடியாக அவர்களுடன் சொல்ல இருக்கிறோம். பத்திரிக்கை மூலமாக சொல்வதில் எங்களுக்கு உடன் பாடில்லை” என்றார். பின்பு பூச்சி முருகன் பேசும்போது, “பேச்சு வார்த்தை மூலம் பேசிக்கொள்ளலாம் எனத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி கடிதம் அனுப்பியுள்ளார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் புகார்கள் கொடுப்பதும் அதற்கு நாங்கள் பதிலளிப்பதும் வழக்கமான ஒன்று தான்” என்றார்.