''இயக்குநர் மகேந்திரனை கலைமேதை ஒருவர், கைகுலுக்க வரும் போது அவமானப்படுத்தினார். அதற்காக ரொம்பவே வருந்தினார் மகேந்திரன்'' என்று நினைவஞ்சலிக் கூட்டத்தில், நக்கீரன் ஆசிரியர் குறிப்பிட்டார்.
இயக்குநர் மகேந்திரன் சமீபத்தில் காலமானார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், அவருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நக்கீரன் ஆசிரியர் கலந்துகொண்டு பேசியது:
''1992-ம் வருடத்தில் இருந்தே மகேந்திரன் சாருக்கும் எனக்கும் நல்ல பழக்கம் உண்டு. அவரை அண்ணன் என்றுதான் அழைப்பேன். அப்போது ஒருமுறை அவர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. ‘மூணுநாளா ரூம்லேருந்தே வெளியே வரமாட்டேங்கிறாரு’ என்று சொன்னார்கள்.
நான் உடனே போனேன். அவரிடம் என்ன ஏது என்று விசாரித்தேன். சமீபத்தில் ஒரு விழாவுக்குச் சென்றபோது, ஒரு கலைமேதையை அவர் சந்தித்ததாகவும் அப்போது கைகுலுக்க இவர் கையை நீட்டியதாகவும் உடனே அந்த மேதை, கையைத் தட்டிவிட்டதாகவும் ‘எனக்குள்ளே ஒரு வைப்ரேஷன் இருக்கு’ என்று அவர் சொன்னதாகவும் இதனால் மனசே சரியில்லை என்றும் மகேந்திரன் சார் சொன்னார். இதையெல்லாம் வைத்து, ஒரு கட்டுரை வெளியிட்டேன். அது அவருக்கு ஓரளவு வடிகாலாக இருந்தது.
அதேபோல, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் வெளியாகி சில வருடங்கள் கழித்து ‘மெளனராகம்’ படம் வெளியானது. ரஷ்ய திரைப்பட விழாவுக்கு இந்த இரண்டு படங்களில் எதை அனுப்புவது என பேச்சு நடந்துகொண்டிருந்தது.
அப்போது இயக்குநர் மகேந்திரன், ரஜினியை வைத்து ‘கைகொடுக்கும் கை’ படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தை அனுப்பினால், ‘கைகொடுக்கும் கை’ படவேலைகள் பாதிக்கும் என்பது உள்ளிட்ட சில அரசியலெல்லாம் விளையாடின. ஆகவே ‘மெளனராகம்’ படம் அனுப்பப்பட்டது. இதுகுறித்தும் என்னிடம் அவர் வேதனையாகச் சொன்னார். இதையும் ஒரு கட்டுரையாகப் பதிவு செய்தேன். இது இயக்குநர் மகேந்திரனுக்கு ஆறுதலாக இருந்தது.
ஒரு டஜன் அளவுக்குத்தான் படங்களை எடுத்திருக்கிறார் மகேந்திரன் சார். ஆனால் உலக அளவுக்கு இன்றைக்கும் அவரை பேசிக் கொண்டிருக்கிறோம். என்றைக்கும் பேசிக் கொண்டிருப்போம்.
பிரபாகரனை ஒருமுறை இரண்டுமுறை பார்த்தவர்களெல்லாம் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு, பப்ளிசிட்டி தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... பார்க்காதவர்கள் கூட கிராபிக்ஸில் போட்டோக்களை இணைத்து, விளம்பரப்படுத்துகிறார்கள்.
ஆனால், பிரபாகரனே விருப்பப்பட்டு அழைத்து, அங்கே சென்ற மகேந்திரன் சார், மூன்று நான்கு மாதங்கள் இருந்து பிரபாகரனின் தம்பிகளுக்கு திரைக்கதை குறித்தும் சினிமா குறித்தும் வகுப்புகள் நடத்தினார். தனி ஈழம் அமைந்ததும் இங்கே ஒரு கல்லூரி அமைக்கப்படும். அதில் நீங்கள் அடிக்கடி வந்து வகுப்புகள் எடுக்கவேண்டும் என்றெல்லாம் கேட்டுக்கொண்டார் பிரபாகரன்.
ஆனால் இவை எது குறித்தும் தம்பட்டம் அடித்துக்கொண்டதே இல்லை மகேந்திரன் சார். நானே பலமுறை கேட்டும் கூட, ‘பிறகு வெளியிடலாம் பிறகு வெளியிடலாம்’ என்றே சொல்லிவந்தார். இந்தப் புகைப்படங்களையெல்லாம் உலகுக்குக் காட்டி, பெயரும் புகழும் சம்பாதிக்கவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததே இல்லை. இப்படியொரு மனிதரைப் பார்ப்பது அபூர்வம்''.
இவ்வாறு நக்கீரன் ஆசிரியர் பேசினார்.