மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்குத் தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. பிரபல நடிகைக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது கேரள அரசு. இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது
ஆய்வறிக்கை வெளியான பிறகு தொடர்ந்து நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறது. இதுவரை இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு, மணியம் பிள்ளை ராஜு, பாபுராஜ் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தெலுங்கு சினிமாவில் நடந்த பாலியல் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட கோரி பெண்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். மேலும் பெங்காலி திரையுலகிலும் குழு அமைக்க கோரி குரல்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழ் நடிகர்கள், நடிகைகள் பலர் மெளனம் காத்து வரும் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், “காலம் காலமாக தமிழ் சினிமாவிலும் அந்த குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் ஒரு 10 பேர் கொண்ட குழுவை நடிகர் சங்கம் சார்பில் அமைக்க இருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட SIAA-GSICC கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது. மேலும் கமிட்டி உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பு, லிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோரும் கலந்து கொண்ட நிலையில் ஆலோசனைக்கு பிறகு 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்பட்டு பின்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும் அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது.