இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டெவில்'. ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தை மிஷ்கின் வழங்குகிறார். மேலும் பாடல்களுக்கு வரிகள் எழுதி இசையமைப்பாளராக இந்த படம் மூலம் அறிமுகமாகிறார் மிஷ்கின். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இவர்கள் பலரும் மேடையில் மிஷ்கினை பற்றிப் பேசி அவரது இசையமைப்பாளர் அறிமுகத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். அப்போது ஆர்.கே. செல்வமணியிடம் மிஷ்கின், "ஒரு சின்ன கோரிக்கை. நான் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் பண்ணுகிறேன். அதில் நிறைய கேரக்டர்ஸ் வருது. ஒட்டுமொத்த படத்தையும் ஒரு ட்ரைனில் எடுக்கிறேன். அதில் 6 திருநங்கைகள் வராங்க. அவுங்க மெட்ராஸ் முழுக்க தேடி அலைந்து கண்டுபுடிச்சு எடுத்தேன். அவங்க, திரைப்படத்துறையில் எங்களுக்கு ஏதாவது உருவாக்குங்க என சொன்னாங்க. அதனால் ஜூனியர் ஆர்டிஸ்டில் அவுங்களை சேர்க்கணும். ஒரு 100 பேர் இருந்தாங்கன்னா 4 திருநங்கைகளாவது இருக்கணும். 25 பேருக்கு 1 திருநங்கையாவது இருக்கணும்" எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், "திருநங்கைகள் அவ்ளோ கஷ்டப்படுறாங்க. இந்த சமூகம் அவங்களை ரொம்ப மோசமா நடத்துது. திரைத்துறை தான் நம்மள காப்பாற்றும் என நம்புறாங்க. தயாரிப்பாளர் சங்கமும் ஃபெஃப்சியும் இணைந்து இதை பண்ண வேண்டும்" என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த ஆர்.கே. செல்வமணி, "உங்கள் கோரிக்கை இப்போதே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நடிப்பது மட்டுமல்ல எந்தத் துறையாக இருந்தாலும் உறுப்பினராக சேரணும், வாய்ப்பளிக்க வேண்டும் என முறையாக வந்தாங்கன்னா நிச்சயமாக அதற்கு எந்த தடையும் இருக்காது" என உறுதியளித்தார்.