![muttiah](http://image.nakkheeran.in/cdn/farfuture/7YwWNogVUA6JgYAcmFOqDLYccFWOGnxHpmcVQ1SFaS8/1603091114/sites/default/files/inline-images/muttiah-muralidharan_0.jpg)
முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈழத் தமிழர்களான 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க'த்தைச் சேர்ந்தவர்கள் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “விஜய் சேதுபதிக்கு உண்மையாகவே முரளிதரன் பற்றிய விஷயங்கள் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவரை பற்றி சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஏனென்றால், அந்தளவிற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். உதாரணமாக, இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று சிங்களவர்கள் சொல்வதற்கு முன்பாக முந்திக்கொண்டு சொல்லி, அவருடைய விசுவாஸத்தை சிங்களவர்களுக்கு காட்டியிருக்கிறார்.
அதேபோல, மே18 2009 இனப் படுகொலை செய்யப்பட்டு பலரும் கொல்லப்பட்ட அந்த நாளை, இனிய நாளாக, மிகவும் சந்தோஷமான நாள் என்று கூறினார். அவர் பெயரில் மட்டும்தான் தமிழை வைத்திருக்கிறார். மற்றபடி தமிழர்களுக்கு உண்டான எந்தவிதக் குணமும் அவருக்கு இல்லை. எதிரிகூட ஒன்றரை லட்சம் மக்களை அழித்த நாளை, இனிய நாளாகக் கொண்டாட மாட்டார்கள். அதை சிங்கள மக்கள் கூட எண்ணி சந்தோஷப்பட்டிருக்க மாட்டார்கள். எங்களுக்கு எத்தனையோ சிங்கள நண்பர்கள் உண்டு, அவர்கள் எல்லாம் இந்த விஷயத்தைச் சொல்லும்போது கண்ணீர் சிந்தி அழுதிருக்கிறார்கள். ஆனால், அந்த நாளை இனிய நாளாகக் கொண்டாடும் அளவிற்கு மனசாட்சி இல்லாத ஒரு ஆள் இந்த முத்தையா. இதனால்தான் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து, அவர் தொடர்பான படம் வெளியாகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
![Ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/24IIj_WWURXA9FUDRz1Ui6oztOGg8IfO7fdyY44u2y8/1598702903/sites/default/files/inline-images/01_19.png)
கடந்த 2011ஆம் ஆண்டு பிரிட்டானிய பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பானம் வந்திருந்தார். அவரிடம் மனு ஒன்றைக் கொடுப்பதற்காக ஒரு சிறு அளவிளான மக்கள் அங்கு கூடியிருந்தோம். அப்போது, ஒரு ஊடகவியாளர் முத்தையா முரளிதரனிடம் இதுகுறித்து கேள்வி கேட்டபோது, 20 அல்லது 30 பெண்கள் அழுது கொண்டிருப்பதால் அது நிஜமாகிவிடாது என்று கூறினார். அப்போது, நாங்கள் என்ன நாடகத்திற்காக அழுதுகொண்டிருந்தோமா? இவர்களை யாரோ இயக்கியிருப்பார்கள் என்று அலட்டிக்கொள்ளாமல் கூறினார். எங்களுடைய போராட்டத்தைக் கொச்சைப்படுத்த இவருக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை. இந்த '800' படத்தில் தமிழ்ப் பட நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
முரளிதரன், மனிதத் தன்மையே இல்லாதவர். எங்கள் வலியை, எங்கள் போராட்டத்தை அந்தளவிற்கு கொச்சைப் படுத்தியிருக்கிறார். 138 நாட்கள் போராடி, 78 உறவுகளை இழந்திருக்கின்றோம். இந்த வலியைப் பற்றி அவருக்குத் தெரியுமா? அப்படித் தெரியாவிட்டாலும் யோசித்துப் பார்க்க வேண்டாமா? அவர் நிறைய தொழில்கள் செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், நாட்டின் பிரதிநிதி போல ஊடகவியளர்களிடம் அப்படி ஒரு அறிக்கையை, அவர் கொடுத்தது கண்டிக்க வேண்டியது. அதை வன்மையாகக் கண்டித்தோம். எனவே, இந்தப் படத்திலிருந்து விலகிவிடுங்கள். தயவுசெய்து உடனடியாக இந்தப் படத்திலிருந்து விலகிவிடுங்கள். முன்பு இருப்பது குழி எனத் தெரிந்தும் காலை விடாதீர்கள்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.