கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர் போலீஸாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவும், ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான அரசின் அமைப்பை எதிர்த்து மக்களின் போராட்டம் தீவிரமாகியுள்ளது. இதையொட்டி #blacklivesmatter என்ற ஹாஷ்டேக் பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதனிடையே கறுப்பின மக்களுக்கு எதிரான அமைப்பை எதிர்த்து நடைபெற்ற மக்களின் போராட்டத்தில் ஹாலிவுட் நடிகரான ஜோர்டான் கலந்துகொண்டு பேசுகையில், "நீங்கள் பாலின சமத்துவத்தை 50/50 என்ற விகிதத்தில் பேணுவோம் என இந்த வருடம் உறுதி கொடுத்தீர்கள். கறுப்பின மக்களை வேலைக்கு எடுப்பது பற்றிய உறுதி எங்கே? நாங்கள் கதை சொல்லும் விதத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று நனைக்கிறீர்களா? எங்கள் இருண்ட பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும். கறுப்பர்களைப் பற்றிய, கறுப்பர்கள் எடுக்கும் படைப்புகள் வர வேண்டும்" என்று ஜோர்டன் பேசியுள்ளார்.
மேலும், “ஒடுக்கப்பட்டவர்களுக்கு அறிவு கிடைக்கக்கூடாது என்பதற்காக அரசாங்கமும், அடக்குமுறை செய்பவர்களும் எந்தத் தூரத்துக்கும் செல்வார்கள் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.