![master vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/uZVfLHK1wAXlTJ3AnoZGUruffou3AkBov6NL8nPaQWE/1591252854/sites/default/files/inline-images/master%20vijay_0.jpg)
கைதி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து இயக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்டிரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். படத்தின் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகுவதாக இருந்த நிலையில் கரோனா பரவலால் ஒத்திப்போனது படத்தின் ரிலீஸ். தற்போது திரையரங்கு திறந்த பின்னர் முதல் ரிலீஸாக இப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தயாரிப்பாளர் கேயார் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
கரோனோ வைரஸின் கொடூரத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்தச் சூழ்நிலையில் முதல் படமாக 'மாஸ்டர்' படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பது தான் உண்மை. சாதாரண சலூன் கடைக்கு முடிவெட்ட செல்வதற்கே ஆதார் கார்டு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதை அமல்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல.
அதிலும் விஜய் படம் என்றால் குடும்பத்துடன் வந்து பார்க்கவே நிறைய பேர் ஆசைப்படுவார்கள். வந்தவர்களில் ஒருவருக்கோ இருவருக்கோ நோய்த்தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் பேராபத்து இருக்கிறது. தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது, 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அதிக படங்கள் வெளி வருவதற்கு வாய்ப்புகள் உருவாகும்.
இதன் மூலம் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வருமான இழப்பைச் சரி செய்ய மத்திய மாநில அரசுகள் விதிக்கும் 26 சதவீத ஜி.எஸ்.டி. மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து, கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இருக்கும் தமிழ் திரையுலகைக் காப்பாற்ற வேண்டும்.
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/6ivcz__3NP0Kg7DKSZn9v4NaT8EzjPE1uO3Obz6YN1s/1590822160/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01.gif)
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதாரச் சிக்கல்களைக் காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.'' என்று தெரிவித்துள்ளார்.