மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 1 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 16ஆம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்போது அவர் பேசுகையில், "மாமன்னன் படம் உருவாவதற்கு தேவர் மகன் படம் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தை பார்த்த நாளில் இருந்து உருவானது தான் மாமன்னன். அப்படத்தை பார்த்த பின்னால் என்னில் ஏற்பட்ட வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் எல்லாமே மாமன்னன் படத்தில் இருக்கிறது. ஒரு சினிமா சமூகத்தை எப்படி புரட்டிப்போடுது; ஒரு பக்கம் சினிமா எடுப்பவர்களுக்கு இன்ஸபிரேஷனாக இருக்கு; மறுபக்கம் வேறொரு தாக்கத்தை ஏற்படுத்துது. இந்த 2 பக்கமும் யோசித்து எது சரி, எது தப்பு என்று தெரியாமல் உழன்று கொண்டிருந்தேன்.
ஆனால், தேவர் மகன் எனக்கும் மனப்பிறழ்வை உண்டாக்கின ஒரு படம். அந்த தேவர் மகன் உலகத்துக்குள்ள பெரிய தேவர் இருக்காரு. சின்ன தேவர் இருக்காரு. இப்படி எல்லாரும் இருக்காங்க. இதுக்குள்ள எங்க அப்பா இருந்தா எப்படி இருக்கும். அதை முடிவு பண்ணி எங்க அப்பாவுக்காக எடுத்தது தான் மாமன்னன். கமல் சார் உருவாக்கிய இப்படம் இத்தனை நாட்கள், காலம், யுகங்கள் தாண்டியும் திரைக்கதையின் மாஸ்டராக இருக்கிறது. தேவர் மகன் ஓரு மாஸ்டர் ஸ்ட்ரோக். எல்லா டைரக்டர்களும் அப்படத்தை பார்த்து படம் எடுப்பார்கள். நானும் அப்படித்தான். பரியேறும் பெருமாள் பண்ணும்போதும் தேவர் மகன் பார்த்துவிட்டு தான் பண்ணேன், கர்ணன் பண்ணும் போதும் தேவர் மகன் பார்த்துவிட்டு தான் பண்ணேன், மாமன்னன் பண்ணும் போதும் தேவர் மகன் பார்த்துவிட்டு தான் பண்ணேன்" என்றார்.
இவரது பேச்சுக்கு தேவர் மகன் திரைப்பட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பையும் பல்வேறு விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.