தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், மன்சூர் அலிகான் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “இது அரும்பாக்கம். 100 மீட்டர் தூரத்தில் கூவம் ஆறு இருக்கிறது. அதையொட்டி வீடுகள் இருப்பதால் பெரும்பாலும் பட்டா இல்லாத நிலங்கள். அதனால் அப்போது கட்டுகிற பொழுது தாழ்வாக கட்டியுள்ளார்கள். நான் கொஞ்சம் உயரமா கட்டியதால் தப்பித்தேன். ஆனால் வீட்டுக்குள்ள மீனெல்லாம் வந்துடுச்சு. செம்பரம்பாக்கம் மீன் வீடு தேடி வருவது மிகப் பெரிய அதிசயம்.
செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடாமல் இருந்தால் அணை உடைந்துவிடும். ஏறி உடைஞ்சிருச்சினா சென்னையே மூழ்கிவிடும். குஜராத்தில் அதிக சுவர் கடிகாரம் செய்யும் இடமான மோர்பியில், நடு ராத்திரியில் அந்த நகரமே மூழ்கடிக்கப்பட்டது. எண்ணில் அடங்காத ஆட்கள் இறந்துபோனார்கள். அப்போது இந்தியாவிற்கே தெரியாது. பிபிசி-யில் செய்தி வெளியான பிறகு தான் அப்போதைய இந்திய அரசு விழித்தெழுந்து காப்பாற்றியது.
அதனால் பெரிய அணைகளெல்லாம் உடைய கூடாது என்பதற்காக திறந்து விட்டுவிடுவார்கள். அதனால் இந்த பகுதிகளில் இருக்கும் தண்ணீரை இரண்டு நாட்களில் எடுத்து விடுவாங்க என்று நினைக்கிறேன். அதனால் உணவு வழங்கி உதவ வருபவர்கள் உடனடியாக வர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.