இந்தியில் ஏராளமான படங்களில் நடித்து இன்றும் லைம் லைட்டில் இருப்பவர் மனிஷா கொய்ரலா. தமிழில் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா என இங்கும் நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே புற்று நோயால் பாதிக்கப்பட்டு பின்பு குணமடைந்து தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஹீரமண்டி வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துள்ளார். ரிஷி சுனக்கின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது குறித்து மனிஷா கொய்ராலா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருப்பாவது, “இங்கிலாந்துக்கும் நேபாளுக்குமான நட்பு உறவு 100 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அதைக் கொண்டாடும் விதமாக என்னை அழைத்துள்ளனர். இது எனக்கு கிடைத்த பெரிய மரியாதை. பிரதமர் ரிஷி சுனக், நேபாளை பற்றி பேசியது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
மேலும் “பிரதமரின் இல்லத்தில் இருந்தவர்கள் ஹீரமண்டி வெப் தொடரை பார்த்து ரசித்ததாக தெரிவித்தனர். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது” என மனிஷா கொய்ராலா பகிர்ந்துள்ளார். நேபாளைச் சேர்ந்த மனிஷா கொய்ராலா அரசியல்வாதி குடும்பத்தை சார்ந்தவர். இவரது தாத்தா பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா 1959 முதல் 1960 வரை நேபாளத்தின் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.