பாலா தற்போது இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இதில் முன்பு சூர்யா கமிட்டாகி நடித்து வந்த நிலையில், சில காரணங்களால் விலகிவிட்டார். மேலும் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரும் விலகிவிட்டார். இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கி வந்தார். கன்னியாகுமரியில் படப்பிடிப்பு தொடங்கி, பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.
இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்க கதாநாயகியாக ரோஷிணி பிரகாஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் கடந்த டிசம்பர் மாதம் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தில் நடித்தபோது பாலா அடித்ததாகவும் அதன் காரணத்தால் படத்தை விட்டு வெளியேறியதாகவும் மலையாள நடிகை மமிதா பைஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அவர் பேசியதாவது, “படத்தில் வில்லடிச்சான் மாடன் என்ற கலை இருந்தது. அந்த கதாபாத்திரம் அனுபவமுள்ள ஒரு கலைஞராக எழுதப்பட்டுள்ளதா என்று கேட்டேன். அனுபவம் வாய்ந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறினார். அப்படி இருக்கும்போது, அந்த கதாபாத்திரத்தின் நுணுக்கங்களை சரியாக நடிக்க வேண்டுமல்லவா? டிரம் வாசித்து கொண்டே பாட வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட பாணியில் செய்ய வேண்டும்.
அதனால் என்னை ஒரு வில்லடிச்சான் மாடன் பெண் கலைஞரிடம் அழைத்து போய், அவர் செய்வதைப் பார்க்கச் சொன்னார் பாலா. நான் பார்த்தவுடனே, அவர் டேக் போய்விடலாம் என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. டேக் போகிற அளவிற்கு நான் தயாராக கூட இல்லை. அவர்கள் என்ன பாடுகிறார்கள் என்பது கூட எனக்குப் புரியவில்லை. அதை தெரிந்துகொள்ள மூன்று டேக்குகள் எடுத்தேன். அதற்கு நடுவில் என்னை பலமுறை அவர் திட்டினார். முன்னதாகவே, நான் திட்டுவேன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பாலா என்னிடம் அறிவுறுத்தினார். இருந்தாலும் அந்த நேரத்தில் அவர் திட்டியது என்னை காயப்படுத்தியது. அதனால், படப்பிடிப்பில் இருக்கும்போதே இதற்கு மனதளவில் தயாராகி வந்தேன். பாலா என்னை அடிப்பதும் உண்டு. சூர்யா சாருக்கு பாலாவை பற்றி முன்பே தெரியும். ஏனென்றால் அவர்கள் முன்பு ஒன்றாக படம் பண்ணியிருக்கிறார்கள். ஆனால் நான் புதிது. இத்தகைய அனுபவம் தான் என்னை படத்திலிருந்து வெளியேறச் செய்தது” என்றார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. மேலும் பாலாவை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்துவந்தனர்.
இந்த நிலையில் மமிதா பைஜூ, இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “தமிழ் திரைப்படத்தில் நான் நடித்தது தொடர்பாக இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. திரைப்பட ப்ரொமோஷன் நேர்காணலின் போது ஒரு பகுதி, சொல்லவந்த அர்த்தத்தை எடுத்துவிட்டு, பொறுப்பற்ற தலைப்பின் மூலம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாலா சாருடன் ப்ரீ புரொடக்ஷன் மற்றும் தயாரிப்பு பணிகள் உட்பட ஒரு வருடத்திற்கு மேல் பணியாற்றியிருக்கிறேன். நான் சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் எப்போதும் என் மேல் கருணை காட்டினார். நான் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த விதமான துஷ்பிரயோகத்தையும் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அனுபவிக்கவில்லை. இதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிற தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாகவே, அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன். வெளியிடும் முன் செய்தியை சரிபார்க்க என்னை தொடர்பு கொண்ட ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.