'அம்மா' என்ற பெயரில் மலையாள நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 18 வருடங்களாக தலைவராக இருந்த நடிகர் இன்னசென்ட் எம்.பி உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து புதிய தலைவராக நடிகர் மோகன்லால் தேர்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் நடிகர் சங்கத்தில் இருந்து நீங்கப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார். இது மலையாள பட உலகில் பெரும் சர்ச்சையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் திலீப் சேர்க்கப்பட்டதை கண்டித்து முன்னணி நாயகிகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் மற்றும் கடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகை ஆகிய 4 பேரும் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து மேலும் 14 நடிகைகள் குற்றவாளிக்கு நடிகர் சங்கம் பாதுகாப்பாக இருப்பதாக குற்றம்சாட்டி நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக எச்சரிக்கை விடுத்தனர். அதுமட்டுமில்லாமல் கேரள மகளிர் ஆணையமும் மோகன்லால் முடிவை விமர்சித்தது. இதை தொடர்ந்து பொதுக்குழுவில் ஒருமனதாக தீலிப்பை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டதாக மோகன்லால் பின்னர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் திலீப் விவகாரத்தால் மலையாள நடிகர் சங்கத்தில் தற்போது மோதல் முற்றியுள்ளது. எதிர்ப்பாளர்கள் இணைந்து புதிய சங்கத்தை தொடங்க முடிவு எடுத்துள்ளனர். நடிகரும், இயக்குனருமான ஆஷி அபு, ராஜீவ் ரவி ஆகியோர் இந்த போட்டி சங்கத்துக்கு தலைமை வகிக்கின்றனர். திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் சினிமா பெண்கள் கூட்டுக்குழு இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. திலீப்பை சேர்த்ததை எதிர்க்கும் மேலும் 100 நடிகர்-நடிகைகளும் புதிய சங்கத்தில் இணைய முன்வந்துள்ளனர். மேலும் கடந்த காலங்களில் மலையாள நடிகர் சங்கத்தால் நடவடிக்கைகளுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட நடிகர்,நடிகைகளும் புதிய சங்கத்தில் சேருகிறார்கள். நடிகர் ஆஷி அபு தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் திருவனந்தபுரம் திரும்பியதும் புதிய சங்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனையும் புதிய சங்கத்தை உருவாக்கும் நடிகர்,நடிகைகள் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதனால் கேரள பட உலகில் மிகுந்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.