தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்த இயக்குனர்களில் முக்கியமானவரான இயக்குனர் மகேந்திரன் நேற்று காலமானார். இவர் குறித்து இயக்குனர் லிங்குசாமியும் கவிஞர் அறிவுமதியும் தங்கள் நினைவுகளை பகிர்ந்தனர்.
லிங்குசாமி
"மேற்குவங்கத்துக்கு ஒரு சத்யஜித்ரே கிடைத்தது போல நமக்குக் கிடைத்தவர் மகேந்திரன் சார். என்னுடைய ஆனந்தம் படத்தில் கொஞ்சமாவது ஒரு இயல்புத்தன்மை இருந்தது என்றால் அதற்குக் காரணம் அவரது படங்கள்தான். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். இதே வீட்டில் என்னை அழைத்து மணிக்கணக்காக இரவு உணவு ரெடி பண்ணி இரவெல்லாம் சினிமா குறித்து பேசியிருக்கிறார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்."
அறிவுமதி
"என் நண்பர் தசரதனால் அவருக்கு இன்னொரு பிள்ளையாக நான் அறிமுகமானேன். மகேந்திரன் அவர்கள், ஒரு உரையாடல் ஆசிரியராக 'வாழ்ந்து காட்டுகிறேன்' போன்ற படங்களில் பக்கம் பக்கமாக எழுதிய வசனங்களுக்கு கைதட்டல் பெற்றவர். அவரே இயக்குனரான போது, அத்தனை பக்கங்களையும் சுண்டக் காய்ச்சி, வெகு சில பக்கங்கள் மட்டுமே வசனம் எழுதி காட்சியில் கவர்ந்தவர். 'உதிரிப் பூக்கள்' படத்தில் கணவன் திரைப்படத்துக்கு அழைக்கும்பொழுது மனைவி வானத்தைப் பார்க்கும் காட்சி அரங்கில் உள்ள அனைவரையும் கைதட்ட வைத்தது. நம் தமிழ்நாட்டின் மிருனாள் சென் போன்ற சிறந்த இயக்குனரை இழந்து தவிக்கிறோம். என் தலைவன் பிரபாகரன் இவரை அழைத்து உரையாடி மரியாதை செய்தார். அந்த நினைவும் எனக்குள் இன்னும் இருக்கிறது."