![lic notice to vignesh shivan movie lic](http://image.nakkheeran.in/cdn/farfuture/zKqueG8NdXwQYmzYTyW1uHBw58IVRLGVuWMY_urbmbw/1704542730/sites/default/files/inline-images/02_103.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தை இயக்க கமிட்டான நிலையில் சில காரணங்களால் அதிலிருந்து விலக்கப்பட்டுவிட்டார். இதையடுத்து பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். கதாநாயாகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பணிகள் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. இப்படத்திற்கு ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தலைப்பு என்னுடையது என்று கூறி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி எல்.ஐ.சி நிறுவனம், பட நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “படத்திற்கு எல்ஐசி பெயரை பயன்படுத்துவதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் மீது மக்களும் வாடிக்கையாளர்களும் கொண்டிருக்கும் நன்மதிப்பை குறைக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றுக் கொண்ட 7 நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றவில்லை என்றால், உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.