‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து படம் இயக்கவுள்ளார். ‘விக்ரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. நடிகர், நடிகை மற்றும் தொழிநுட்பக் கலைஞர்கள் தேர்வு உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கமல் தற்போது தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், தேர்தலுக்குப் பிறகு படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ‘விக்ரம்’ படத்தின் வில்லன் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகர் லாரன்ஸை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. கமலுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்றவுடன் லாரன்ஸும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘விக்ரம்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.