திரைத்துறையை சார்ந்த பல்வேறு துறையினர் #MeToo மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்களை கூறிவரும் நிலையில் தற்போது நடிகையும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் #MeTooவில் மலையாள இயக்குனரான ஹரிஹரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அதில்..."ஹரிஹரன் இயக்கிய 'பழசிராஜா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். சின்ன வேடமாக இருந்தாலும் மம்முட்டிக்கு மனைவி வேடம். பூஜையிலும் கலந்து கொண்டேன். பூஜை நடந்த அந்த நாளில் இருந்து சில நாட்களுக்கு பிறகு திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். காலையில் போய் இறங்கியதும் ஹரிஹரனிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. மாலை சந்திக்கலாம் என்று கூறி இருந்தார்.
நான் அன்றைக்கு மாலையே சென்னை திரும்ப டிக்கெட் எடுத்திருந்தேன். அதனால் ‘நிகழ்ச்சி முடித்து விட்டு சென்னை கிளம்பும் வழியில் நானே வந்து பார்த்துவிட்டுப் போகிறேன்’ என்று சொன்னேன். இல்லை இன்று இரவு தங்குங்கள். நான் இங்கே வந்ததே உங்களை பார்க்கத்தான்’ என்று சொன்னார். என்னென்ன கெட்ட வார்த்தைகள் என் வாயில் இருந்து வந்ததோ அத்தனையையும் செய்தியாக அனுப்பி விட்டு கிளம்பி வந்துவிட்டேன். இப்போது சிலர், அவர் பெரிய ஆள் அவரை பற்றியெல்லாம் ‘மீடூ’ வில் பேசாதீர்கள் என்று சொன்னார்கள். நான் ஏன் பேசாமல் இருக்க வேண்டும். பெரிய ஆட்கள் என்றால் அப்படி இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று சொல்லிகொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. அன்றைக்கு எனக்கான ஒரு வாய்ப்பு பறிபோய்விட்டது இல்லையா. அதனால் நான் பேசியே ஆகவேண்டும் என்று தான் இப்போது இதைச் சொல்கிறேன்" என்றார். லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த புகார் தமிழ், மலையாள உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.