காமெடி நடிகராக நடித்து பிரபலமடைந்த கிஷோர் ராஜ்குமாரை நக்கீரன் ஸ்டூடியோவிற்காக சந்தித்தோம். தன்னுடைய திரை அனுபவங்கள் பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
என்னுடைய தாய் தந்தை காதல் திருமணம் செய்ததால், நான் பிறந்தவுடன் என்னைக் காரணமாக வைத்து எங்களுடைய குடும்பங்கள் இணைந்தன. இயக்குநர் ராஜசேகர் அவர்களிடம் என்னுடைய அப்பா டிரைவராக வேலை செய்தார். அந்த காலகட்டங்களிலிருந்து சிறு வயதில் சினிமா ஆசை எனக்குள் உருவாகி இருக்கிறது. நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அவருடைய படங்கள் மற்றும் வசனங்களின் மூலம் சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. ரஜினி சாருக்கு பாட்ஷா பாய்க்குப் பிறகு லால் சலாம் படத்தில் வரும் மொய்தீன் பாய் கேரக்டர் அதிகம் பேசப்படும் என்று எதிர்பார்க்கிறேன். கல்லூரி காலங்களில் குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். நாங்கள் செய்யும் குறும்படங்களில் பெரும்பாலும் ஆண்கள் தான் நடிப்பார்கள். ஏனெனில் குறும்படங்களுக்கு ஹீரோயின்கள் கிடைப்பது கஷ்டம்.
முதலில் நான் 'இசை' படத்தில் தான் நடித்தேன். எஸ்.ஜே.சூர்யா சார் இயக்கும் விதமே சூப்பராக இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் சொன்னதைச் சரியாக செய்ய வராமல் அவரிடம் செம்மையான திட்டு வாங்கினேன். அதன் பிறகு திட்டியதற்காக சாரி கேட்டார். பிறகு சின்னச் சின்ன வேடங்கள் கிடைத்தன. 4ஜி என்கிற படத்தில் யோகி பாபு சார் நடிக்க வேண்டிய கேரக்டர் எனக்கு கிடைத்தது. அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. விஐபி 2, கைதி, கோமாளி ஆகிய படங்களில் நடித்தேன். இதுவரை நடித்ததிலேயே அதிக சீன்களில் நான் வருவது நாய் சேகர் படத்தில் தான். இயக்குநர் பிரதீப் குறும்பட நடிகர்களுக்கு, யூடியூப் கலைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்குவார்.
கோமாளி படத்துக்காக ஜெயம் ரவி உண்மையிலேயே உடம்பை குறைத்தார். நான் நடிக்கும் படங்களில் எந்தக் காட்சிகள் படத்தில் வரும் என்பது எனக்குத் தெரியும். என்னுடைய குடும்பத்தினர் நான் நடித்த காட்சிகளை டிவியில் பார்ப்பார்கள். இன்னும் சிறப்பான பாத்திரங்களைச் செய்துவிட்டு என் குடும்பத்தினரை தியேட்டருக்கு அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். இடையில் ஒரு கார் கம்பெனியில் வேலை பார்த்தேன். வாழ்க்கையில் சவால்கள் வரும்போது நானும் ஃபீல் செய்திருக்கிறேன். ஆனால் அவை அனைத்தையும் கடந்துதான் நாம் வரவேண்டும்.