‘நான் ஈ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் பாட்ஷா என்று அழைக்கப்படும் கிச்சா சுதீப். இவர் கன்னட சினிமா மட்டுமின்றி தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமடைந்தவர். தற்போது சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் உருவாகும் தபாங் 3 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
![bailwan](http://image.nakkheeran.in/cdn/farfuture/xFEu2W7x446ICLqIaJyZag_Hh08QUbMvXuSFKhyxyHc/1564725321/sites/default/files/inline-images/bailwan.jpg)
இவர் நடிப்பில் உருவான கன்னட படம் பயில்வான் ஐந்து மொழிகளில் ரிலீஸாக காத்திருக்கிறது. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், அதிக வசூலை வாரிக்குவித்து கன்னட சினிமாவின் மார்க்கெட்டை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கன்னடத்தில் தயாராகும் கோட்டிகோபா-3 என்ற புதிய படத்துக்கு சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பெரிய செட் அமைத்து ஷூட்டிங் நடந்து வருகிறது.
இதில் சுதீப் பங்கேற்று நடித்து வந்தார். சண்டை காட்சியொன்றை படமாக்கும்போது சுதீப்பிற்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் பலத்த அடிபட்டது. சுதீப் வலியால் துடிக்க, உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சில வாரங்கள் சுதீப் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதால் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.